தாயின் ஓயாத செல்போன் பேச்சு.. நிர்கதியான 2 பெண் குழந்தைகள்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கணவனின் செல்போன் அழைப்பை ஏற்காமல், ஆண் நண்பருடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசிய மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கணவன் கைதான நிலையில் அவர்களது இரு பெண் குழந்தைகளும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி - காமராஜ் வீதியை சேர்ந்த விஜய் அங்குள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ப்ரியா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற விஜய், மதியம் 2 மணியளவில் வீட்டின் அருகிலுள்ள மளிகைக் கடைக்கு போன் செய்து, தனது மனைவி பிரியாவின் போன் வேலை செய்யவில்லை என்றும் என்ன ஆனது என்று பார்க்கும்படியும் கூறியுள்ளார். அதன்படி விஜய் வீட்டிற்குச் சென்று பக்கத்து வீட்டுக்காரர், உள்ளே பிரியா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விஜய்க்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்டுக்கிடந்த பிரியா அணிந்திருந்த தங்க நகைகள், கால் கொலுசு உள்ளிட்டவை காணாமல் போயிருப்பதைக் கண்டு நகைக்காக நடந்த கொலையாக இருக்கலாம் என முதலில் சந்தேகம் எழுந்தது. இதற்குள் நிறுவனத்தில் இருந்து வீட்டுக்கு வந்த விஜய், போலீசார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கதறி அழுது கூப்பாடு போட்டுள்ளார்.
சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு விசாரணையில் இறங்கிய போலீசார், பிரியாவுக்கு வந்த செல்போன் அழைப்புகளையும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் கொலை நடந்த சமயம் விஜய் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. விஜயின் “ஓவர்” பெர்ஃபார்மன்ஸில் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த போலீசார், அவரை முறையாக விசாரித்ததில் கொலையை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.
விஜயின் கோவையை சேர்ந்த நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதில் அந்த நண்பனுக்கும் பிரியாவுக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொள்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனையறிந்து பலமுறை பிரியாவை விஜய் கண்டித்துள்ளார். ஆனாலும் பிரியாவின் செல்போன் காதல் தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற விஜய், சுமார் 11.30 மணியளவில் பிரியாவுக்கு போன் செய்துள்ளார். அப்போது போன் “பிசி” எனத் தகவல் வந்துள்ளது. 10 நிமிடத்துக்கு ஒருமுறை பிரியாவை தொடர்புகொள்ள அவர் முயற்சித்துக் கொண்டே இருந்த நிலையில், “வெயிட்டிங்கில்” வந்த கணவரின் அழைப்பை கண்டுகொள்ளாமல் பிரியா தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. இப்படி 11.30 மணிக்குத் தொடங்கிய பேச்சு மதியம் 2 மணி வரை சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்ததாகக் கூறப்படும் நிலையில், கடும் ஆத்திரம் அடைந்துள்ளார் விஜய்.
இதனையடுத்து மருந்து வாங்கச் செல்வதாக நிறுவனத்தில் அனுமதி கேட்டுவிட்டு வீட்டுக்கு சென்ற விஜய், மனைவியின் கழுத்தை நெரித்தும், கட்டையால் அடித்தும் கொலை செய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். பிறகு யாரும் கவனிக்காத வகையில் மீண்டும் நிறுவனத்துக்குச் சென்றவர், கொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதை போல சித்தரிக்க முயற்சித்து பக்கத்திலுள்ள மளிகைக் கடைக்கு போன் செய்து ஒன்றும் தெரியாதவர் போல் விசாரித்து நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது. விஜையை கைது செய்த போலீசார், அவரது இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரியாவின் நகைகளையும் மீட்டனர்.
ஓயாத செல்போன் பேச்சால் நிகழ்ந்த இந்த விபரீத கொலை வழக்கில் கைதாகி விஜய் ஜெயிலுக்கு சென்றுவிட்டதால் 10 வயதைக்கூட தொடாத அவரது இரண்டு பெண் குழந்தைகளும் நிர்கதியாகியுள்ளனர்.
Comments