கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க தடை விதிக்க இயலாது - உயர்நீதிமன்றம்

0 3990
கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க தடை விதிக்க இயலாது - உயர்நீதிமன்றம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான பத்தரை சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் இறுதி விசாரணையை செப்டம்பர் 14-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, 1983ஆம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தது.

இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றி சில இடங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், மற்றவர்களுடன் கலந்தாலோசிக்காமல் 10.5% இட ஒதுக்கீட்டுக்கு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்ததாகவும், ஏற்கனவே வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு உள்ளதால் கல்வியில் தனி இடஒதுக்கீடு தேவையில்லை என வாதிடப்பட்டது. அத்தோடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய ஜாதிகளை அடையாளம் காண்பதற்கும், பட்டியலில் சேர்ப்பத்ற்கும் குடியரசு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சில கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதாக குறிப்பிட்டனர். இந்த சட்டத்தால் பயனடைபவர்களுக்கு வழக்கு பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன், இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

இந்த சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டு வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 14-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments