சர்ச்சைப் பேச்சு எதிரொலி-மத்திய அமைச்சர் கைது
நாடு சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது கூட தெரியாத மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும் என்று பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே நாசிக் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராய்கட்டில் பேசிய நாராயண் ரானே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சுதந்திர தினத்தை ஒட்டி உரை ஆற்றும் போது எத்தனையாவது சுதந்திர தினம் என தெரியாமல் பேச்சின் நடுவில் பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றியதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளது என்பதை கூட அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டு ஒரு முதலமைச்சர் பேசுவது எவ்வளவு அவமானகரமானது என்று வினவியுள்ள ரானே, தான் அங்கிருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைந்திருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து சிவசேனாவின் யுவசேனா அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து புனே மற்றும் நாசிக்கில் நாராயண் ரானே மீது 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.இந்த நிலையில், மும்பை ஜுஹுவில் உள்ள நாராயண் ரானேயின் வீட்டை முற்றுகையிட சிவசேனா தொண்டர்கள் சென்றனர். அவர்களை தடுக்க பாஜகவினர் முயன்றதால் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கல்வீசி தாக்கிக் கொண்டனர்.
போலீசார் தலையிட்டு அந்த கும்பலை கலைத்தனர். இதனிடையே நாராயண் ரானேவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து, மும்பை அருகே உள்ள ரத்னகிரியில் வைத்து அவரை கைது செய்த நாசிக் போலீசார் விசாரணைக்காக அவரை அழைத்து சென்றனர்.
முன்னதாக தம் மீது போடப்பட்ட FIR ஐ ரத்து செய்ய கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற நாராயண் ரானேவின் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
நாராயண் ரானே மாநிலங்களவை எம்பி ஆக உள்ளதால் அவரது கைது விவகாரம் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு தெரிவிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் என்ற அளவில் அவர் நடத்தப்படுவார் என்றும் நாசிக் போலீஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.
Comments