மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைவேன் என பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது FIR பதிவு
நாடு சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது கூட தெரியாத மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும் என்று பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராய்கட்டில் பேசிய நாராயண் ரானே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சுதந்திர தினத்தை ஒட்டி உரை ஆற்றும் போது எத்தனையாவது சுதந்திர தினம் என தெரியாமல் பேச்சின் நடுவில் பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றியதாக தெரிவித்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளது என்பதை கூட அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டு ஒரு முதலமைச்சர் பேசுவது எவ்வளவு அவமானகரமானது என்று வினவியுள்ள ரானே, தான் அங்கிருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைந்திருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து சிவசேனாவின் யுவசேனா அமைப்பினர் அளித்த புகாரில் புனே காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் மத்திய அமைச்சர் ரானே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாசிக் போலீசாரும் அமைச்சர் நாராயண் ரானே மீது கைது வாரண்டு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments