சென்னை மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், இலவச மருத்துவ காப்பீடு திட்டம், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.
சமூக பொருளாதாரம் மற்றும் கல்வியில் தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றவர் கலைஞர் எனவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக வாழ்க்கை முழுவதும் போராடியவர் கலைஞர் எனவும் புகழாரம் சூட்டிய மு.க.ஸ்டாலின், 13 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, 5 முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் கலைஞர் என நினைவு கூர்ந்தார்.
கலைஞரின் திட்டங்களையும், அவரது தொலைநோக்கு சிந்தனைகளையும் எதிர்வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், சென்னை மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அதிமுக மனதார வரவேகிறது என்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமது தந்தை தீவிர கலைஞர் பக்தர் என தெரிவித்தார். தனது தந்தையின் பெட்டியில் எப்போதும் பராசக்தி, மனோகரா படங்களின் வசன புத்தகங்கள் இருக்கும் எனவும் ஓ.பி.எஸ். கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், தொண்டன் எப்படி இருக்க வேண்டும், தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு உதாரணமே முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் என புகழாரம் சூட்டினார்
Comments