4 பெண் பிள்ளைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிய வசூல்ராஜா...! வட்டியை நம்பி கம்பி எண்ணுகிறார்

0 4010
4 பெண் பிள்ளைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிய வசூல்ராஜா...! வட்டியை நம்பி கம்பி எண்ணுகிறார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பெற்றோர் வாங்கிய கடனைத் திருப்பித் தராத ஆத்திரத்தில், 4 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்துப் பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடனைப் பெற கறார் காட்டிய உறவுக்காரர் கைதாகி கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியார் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி ரகு - அஞ்சுகம் தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். ரகுவின் மனைவி அஞ்சுகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். ரகு கொரோனா காலத்தில் வேலைக்கு செல்ல இயலவில்லை எனக்கூறி , தனது தங்கையின் கணவர் கேஷ்டிராஜா என்பவரிடம் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு 2லட்சத்து 50ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கடனாக பெற்றுள்ளனர்.

குடி போதைக்கு அடிமையான ரகு வேலைக்கு சரியாக செல்லாத காரணத்தினால் முறையாக வட்டி கட்டவில்லை என்று கூறப்படுன்றது. ஆனால் கடன் கொடுத்த கேஷ்டிராஜா வட்டியுடன் சேர்த்து 5 லட்சம் ரூபாயாக கணக்கு போட்டு திருப்பி கேட்டு வந்துள்ளார். வாங்கிய கடனில் 40 ஆயிரம் ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதியை கொடுக்காமல் ரகு இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகின்றது.

திங்கட்கிழமை காலையில் ரகுவும், மனைவி அஞ்சுகமும் வெளியில் சென்றிருந்ததால், வீட்டில் அவரது 3 மகள்களுடன், உறவினர் ஒருவரது மகளும் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த கேஷ்டிராஜா பணம் தராமல் இழுத்தடிக்கும் ரகுவிடம் பணத்தை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தில், 4பெண் பிள்ளைகளையும் வீட்டின் உள்ளே வைத்து கேட்டை இழுத்து பூட்டி சாவியை கையோடு எடுத்துச்சென்றுள்ளார்.

பாதுகாப்பு கருதி உள்பக்கமாக பூட்டிக் கொண்ட அந்த பெண் குழந்தைகள் ,பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தாய் அஞ்சுகம் அளித்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கேஷ்டிராஜாவிடம் இருந்த சாவியைப் பெற்று அந்த பூட்டை அகற்றி அவரது மகள்களை மீட்டனர்

பெண் பிள்ளைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிய கேஷ்டிராஜாவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். கடன்கார தகப்பனால் அவரது பெண்பிள்ளைகள் வீட்டுச்சிறையில் தவிக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடன் வாங்கியவரை விட்டுவிட்டு பெண் பிள்ளைகளுடன் அவரது வீட்டுக்கு பூட்டு போட்டால் வட்டியுடன் பணம் கிடைக்கும் என்று நம்பியவர், இறுதியில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments