அன்பு மகனை மீட்க ரூ.3 கோடியை வீசிய அரிசி ஆலை அதிபர்..! போலி போலீஸ் கைவரிசை

0 4346
அன்பு மகனை மீட்க ரூ.3 கோடியை வீசிய அரிசி ஆலை அதிபர்..! போலி போலீஸ் கைவரிசை

திருப்பூரில் போலீஸ் எனக்கூறி பட்டபகலில் அரிசி ஆலை அதிபரின் மகனை இன்னோவா காருடன் கடத்திச்சென்று 3 கோடி ரூபாய் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட் படத்தை பார்த்து கடத்தலில் ஈடுபட்ட கொள்ளையர்களை சிக்கவைத்த சிசிடிவி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த கவுண்டம் பாளையம் பகுதியில் அரிசி ஆலை நடத்திவருபவர் ஈஸ்வரமூர்த்தி . இவரது மகன் சிவபிரதீப். மகனின் மீது அளவுகடந்த பாசம் காட்டி அக்கறையுடனும் ஈஸ்வர மூர்த்தி கவனித்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் சிவபிரதீப் அரிசி ஆலையில் இருந்து தனது இன்னோவா காரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். காரை டிரைவர் ஓட்டிவந்த நிலையில் வீரசோழபுரம் அருகே டாடா சுமோ வாகனம் ஒன்று அவர்களது காரை மறித்துள்ளது. அதில் இருந்து இறங்கிய 4 பேர் தங்களை போலீஸ் எனகூறி காரில் ஏறி காரை தாங்கள் சொல்லும் இடத்துக்கு ஓட்டிச்செல்லும் படி கூறியுள்ளனர். காருக்குள் ஏறியதும் சிவபிரதீப் மற்றும் ஓட்டினரின் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டு மிரட்ட தொடங்கி உள்ளனர்.

இதையடுத்து தான் கடத்தப்பட்டிருப்பதை சிவ பிரதீப் உணர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் ஈஸ்வர மூர்த்தியை தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி ஒருவன், சிவ பிரதீப்பை கடத்தி இருக்கும் தகவலை சொல்லி 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளான், போலீசிடம் சென்றால் மகனை கழுத்தை அறுத்து வீசிவிடுவோம் என பயமுறுத்தி உள்ளனர். மகனுக்கு முன்னால் பணம் பெரிதாக தெரியாததால் உடனடியாக 3 கோடி ரூபாய் பணத்துடன் காரை எடுத்துக் கொண்டு கடத்தல் கும்பல் அழைத்த இடத்துக்கு சென்றுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் பகுதியில் சாலையில் வைத்து 3 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு இன்னோவா காருடன் சிவபிரதீப்பை கடத்தல் கும்பல் விட்டுச்சென்றுள்ளது. இதையடுத்து மகனை பத்திரமாக மீட்டு வந்த ஈஸ்வரமூர்த்தி இந்த கடத்தல் மற்றும் பணம் பறிப்பு குறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணையை முன்னெடுத்த போலீசார் அவரது அரிசிஆலை தொடங்கி கடத்தப்பட்ட இடம் மற்றும் மீட்கப்பட்ட இடம் வரையிலான கண் காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அரிசி ஆலையில் வேலைபார்த்த சக்திவேல் என்பவர் சிவபிரதீப்பின் கார் வெளியே சென்றதும் செல்போன் பேசியபடியே வெளியே செல்வது தெரியவந்தது. அவரது செல்போன் சிக்னலை வைத்து மதுரை லாட்ஜில் பதுங்கி இருந்த சக்திவேலையும், கூட்டாளிகளான பாலாஜி, அகஸ்ட்டின் ஆகியோரையும் மதுரை கவல்துறையினர் உதவியுடன் சுற்றிவளைத்து கொத்தாக தூக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு கூட்டாளி பசீரை கிருஷ்ணகிரி போலீசார் உதவியுடன் மடக்கினர். இதையடுத்து 4 பேரையும் காங்கேயம் கொண்டு வந்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர், 4 பேரிடம் இருந்து இதுவரை 1 கோடியே 89 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பக செய்தியாளர்களை சந்தித்த மேற்குமண்டல ஐஜி சுதாகர், ஈஸ்வரமூர்த்தி தனது மகனை அதிக அக்கறையுடன் பார்த்துக் கொள்வதை , அவரது ஆலையில் கிரேன் அப்பரேட்டராக வேலைபார்த்து வந்த சக்திவேலும், பாலாஜியும் அறிந்து வைத்துள்ளனர். மேலும் அவரிடம் கோடிக்கணக்கில் ரொக்கப்பணம் கையிறுப்பு உள்ளதையும் தெரிந்து வைத்திருந்ததால் இந்த கடத்தல் சம்பவத்துக்கு திட்டமிட்டுள்ளனர். கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றுவது தொடர்பாக நிறைய ஹாலிவுட் படங்களை பார்த்துள்ளனர்.

இறுதியில் கடந்த ஒரு வாரமாக சிவ பிரதீப் ஆலையில் இருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டு கடத்தல் திட்டத்தை செயல்படுத்திவிட்டு பணத்தை பிரித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர் என்று தெரிவித்த ஐ.ஜி சுதாகர், இந்த சம்பவத்தில் ஈஸ்வரமூர்த்தி தனது மகன் மீது வைத்திருந்த அதீத பசத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு , மிரட்டினால் காவல்துறைக்கு செல்ல மாட்டார்கள் என கணித்து கடத்தல்கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

செல்வந்தர்கள் தங்களது பாசத்தையோ, தங்களிடம் உள்ள பணத்தையோ, நன்கு பேருக்கு தெரியும் வகையில் வெளியில் காட்டினால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த கடத்தல் சம்பவம்..!

இதனிடையே, கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். 7 பேர் கொண்ட கடத்தல் கும்பலில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகியுள்ள மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த கடத்தல் வழக்கில் மேலும் இருவர் போலீசில் சிக்கியுள்ளனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சையத் என்பவனும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஜாபர் சாதிக்கிடமிருந்து 40 லட்சம் ருபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருபதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

7 பேர் கொண்ட கடத்தல் கும்பலில் 6பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments