ரூ.3 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன்; போலீசில் சொல்லாமல் பணத்தைக் கொடுத்து மகனை மீட்ட தந்தை..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயேம் அருகே தொழிலதிபர் மகன் ஒருவர் கடத்தப்பட்டு, 3 கோடி ரூபாய் கொடுத்து மீட்கப்பட்ட நிலையில் கொள்ளை கும்பல் மதுரையில் சிக்கியது.
கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர், அப்பகுதியில் மகாராஜா பிராண்ட் என்ற பெயரில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார்.
இவரது மகன் சிவபிரதீப் என்பவரை நேற்று பாப்பினி என்ற இடத்தின் அருகே 7 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் ஈஸ்வரமூர்த்திக்கு போன் செய்து, மகனை விடுவிக்க வேண்டும் என்றால் 3 கோடி ரூபாய் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். பிரச்சனை இல்லாமல் மகனைக் காப்பாற்ற எண்ணிய ஈஸ்வரமூர்த்தி, போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் அவர்கள் கேட்ட பணத்தை, கொடுத்து சிவபிரதீப்பை மீட்டு வந்துள்ளார்.
அதன் பிறகே போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், மதுரையில் வைத்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒன்றரை கோடி ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
Comments