திருட்டு போதகர் களவாணி பூசாரி காப்பு மாட்டிய போலீஸ்..! தொடரும் பக்தி பாவங்கள்..!

0 6300
திருட்டு போதகர் களவாணி பூசாரி காப்பு மாட்டிய போலீஸ்..! தொடரும் பக்தி பாவங்கள்..!

திண்டிவனம் அருகே மயிலம் சுற்றுவட்டார பகுதியில் வசதியான வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்களை வரவைத்து நகை பணத்தை கொள்ளையடித்து வந்த மத போதகர் மற்றும் கோவில் பூசாரி ஆகியோர் கும்பலுடன் போலீசில் சிக்கி உள்ளனர். ஊருக்குள் பக்தியுடன் சுற்றுவது போல நடித்து பக்தர்களின் செல்வத்துக்கு வேட்டுவைத்த கேடிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே மயிலம் காவல் நிலைய ஆய்வாளர் கிருபா லட்சுமி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை போலீசார் மறித்த போது காரில் வந்தவர்கள் போலீசாரை இடிப்பது போல் வந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதனையடுத்து, காரின் பின்னால் விரைந்து சென்ற போலீசார் காரினை மடக்கி பிடித்து காரில் இருந்த 8 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் 8 பேரும் கொள்ளையர்கள் என்பதும் மயிலம் அடுத்த முப்புலி கிராமத்தில் கோவிலில் நகை கொள்ளை அடித்தது, வெளியனூரில் ஒரு வீட்டை உடைத்து உள்ளே சென்று கணவன், மனைவி, மகள் ஆகியோரை கட்டிப்போட்டு அவர்களிடமிருந்து 49 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தது மற்றும் ஜக்காம்பேட்டை பகுதியில் பூட்டியிருந்த இரு வீடுகளில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

ஊருக்குள் பக்தியுடன் இருப்பது போல காட்டிக் கொண்ட திருட்டு பூசாரியும், களவாணி போதகரும் இந்த கொள்ளை சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் தகவலும் வெளிச்சத்திற்கு வந்தது.விக்கிரவாண்டி அடுத்த தென்பேர் புதுபாளையத்தை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஏழுமலை, திண்டிவனம் கீழ் மயிலம் பகுதியைச் சேர்ந்த அம்மன் கோயில் பூசாரி சக்திவேல் ஆகிய இருவரும் ஊருக்குள் சென்று ஜெபம் செய்வது போலவும், பக்தர்களை சந்திப்பது போலவும் நோட்டமிட்டு வசதியானவர்களின வீடுகளை அடையாளம் கண்டுள்ளனர் , திருநெல்வேலியை சேர்ந்த மகேந்திரன், புரோஸ்கான்யாசர், மதிபாலன், அவிநாசியைச் சேர்ந்த ஆனந்தகுமார், விஜய்பாண்டியன், , திருவண்ணாமலை மாவட்டம் குமார் ஆகியோரை ஏவி வசதியான வீடுகளில் இந்த கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியதாக சுட்டிக்காட்டும் காவல்துறையினர். இந்த கும்பல் கடந்த 7 ஆண்டுகளாக மயிலம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் பல வீடுகளில் கொள்ளையடித்து சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் கோயில் பூசாரி சக்திவேல், தான் பூஜை செய்யும் அம்மன் கோவிலில் புதையல் இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டி புதையல் கிடைக்காமல் முயற்சியைக் கைவிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை கும்பலிடம் இருந்து 26 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த குற்ற சம்பவங்களில் தொடர்புடைய மேலும் ஒருவர் சிறையில் உள்ள நிலையில் மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். பக்தியின் பெயரால் சுற்றும் அறிமுகமில்லா நபர்களின் பின்னணியை ஆராயாமல் வீட்டுக்குள் சேர்ப்பது என்ன மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments