புதிய ஹால்மார்க் விதி ; தங்க நகை மற்றும் வைர வணிகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு
புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அடையாளமாகத் தமிழகம் முழுவதும் திங்களன்று பகுதிநேரம் நகைக் கடைகள் மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க நகை மற்றும் வைர வணிகர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி, புதிய விதிமுறையால் தங்க நகை விலை உயரும் எனத் தெரிவித்தார்.
நகைக் கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு தங்க நகையிலும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என்கிற இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் புதிய விதிக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். தனி அடையாள எண் பெற நகை வாங்குவோரின் தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுவதாகவும், இதனால் தனிநபர் ரகசியம் காக்க இயலாத சூழல் உருவாகும் என்றும் தெரிவித்தார்.
ஹால்மார்க் தனி அடையாள எண் பெறக் காத்திருப்பதால் வணிகத்துக்குக் குறைந்தது 5 முதல்10 நாட்கள் வரை தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். புதிய விதிமுறையால் தங்க நகை விலை உயரும் என்றும் தெரிவித்தார்.
Comments