OLX ஆப்-ல் தேடி வந்த ஆப்பு..! சென்டிமென்டில் கவிழ்ந்த இளைஞர்..!
OLX மூலம் கே.டி.எம். பைக்கை விற்பதாக கூறி ஏமாற்றி தன்னிடம் இருந்து 30ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற நபரை, அவன் பாணியிலேயே பேசி வரவைத்து இளைஞர் போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் கோயம்புத்தூரில் நடைபெற்றுள்ளது.கடைசியாக ஒருமுறை பைக்கை ஓட்டிப்பார்த்துக் கொள்கிறேன் எனக் செண்டிமெண்டாக பேசி, பணத்தோடு தப்பிச் சென்று டிமிக்கி கொடுத்த இளைஞர் போலீசில் சிக்கியதின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த விக்ரம் secondhand-ல் பைக் வாங்குவதற்காக OLX ஆப் மூலம் தேடியுள்ளார். அப்போது, லட்சுமண குமார் என்பவன் Seconhand கே.டி.எம். பைக்கை விற்பனைக்காக பதிவேற்றம் செய்திருந்ததை பார்த்த விக்ரம், அவனை தொடர்பு கொண்டுள்ளார். பைக்கின் விலை 64ஆயிரம் ரூபாய் என லட்சுமணக்குமார் கூறவே, பைக்கை பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன் என விக்ரமும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பைக்கை பார்ப்பதற்கு கோயம்புத்தூர் லட்சுமி மில் அருகே வருமாறு கூறிய லட்சுமணக்குமார், முன்பணமாக 30ஆயிரம் ரூபாய் எடுத்துவரச் சொல்லியுள்ளான். இதனை நம்பி கையில் பணத்துடன் பைக் வாங்கும் ஆசையில் சென்ற விக்ரமுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. முன்பணம் 30ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டவன், கடைசியாக ஒருமுறை தனது பைக்கை ஓட்டிப் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளான்.
செண்டிமெண்டாக பேசியதால் விக்ரமும் பெருந்தன்மையுடன் பைக்கை ஓட்டிப் பார்க்க அனுமதித்த நிலையில், பைக்கை எடுத்துக் கொண்டு சென்ற லட்சுமணக் குமார் வெகு நேரமாகியும் திரும்பிவரவில்லை.பின்னர், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வெம்பி போன விக்ரம் போலீசில் கூட புகாரளிக்காமல் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து, கடந்த 31-ந் தேதி அதே கே.டி.எம். பைக், அதே நபரால் விற்பனைக்காக ஓ.எல்.எக்ஸில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த விக்ரம், அவனை எப்படியாவது பிடித்து போலீசில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார்.
தனது நண்பரின் செல்போனில் இருந்து லட்சுமணக் குமாரை தொடர்புகொண்ட விக்ரம், பைக்கை பார்க்க வருவதாக கூறி அதே கோயம்புத்தூர் லட்சுமி மில் அருகே வருமாறு கூறியுள்ளனர். தாம் போட்ட தூண்டிலில் அடுத்த மீன் சிக்கிவிட்டதாக எண்ணி ஆசையோடு பைக்குடன் சென்ற லட்சுமணக்குமார், பொறியில் சிக்கிய எலியாக மாட்டிக் கொண்டான். கோயம்புத்தூர் பந்தய சாலை காவல் நிலையத்தில் கையும், களவுமாக ஒப்படைக்கப்பட்ட லட்சுமணக்குமாரை கைது செய்த போலீசார், மோசடிக்கு பயன்படுத்திய கே.டி.எம். பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments