கழட்டி விட்ட காதலி உயிரை துறந்த இளைஞருக்காக உயிரை விட துணிந்த நண்பன்..! போராடி மீட்ட சம்பவம்

0 6146
கழட்டி விட்ட காதலி உயிரை துறந்த இளைஞருக்காக உயிரை விட துணிந்த நண்பன்..! போராடி மீட்ட சம்பவம்

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட நண்பனை காப்பாற்ற இயலவில்லையே என்ற விரக்தியில் விஷம் சாப்பிட்ட இளைஞரை மருத்துவர்கள் போராடி மீட்ட சம்பவம் கடலூர் அருகே நடந்துள்ளது. தற்கொலைக்கு முயன்ற நண்பனால் போலீசுக்கு தெரியவந்த ஒரு தலை காதலின்  விபரீத மரணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

கடலூரை அடுத்த பனங்காட்டு நகர் பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி இவர் துணியை வெளுக்க பயன்படும் ரசாயணத்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூரிய மூர்த்தியை அங்குள்ள மருத்துவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி விஷத்தை வெளியேற்றி காப்பாற்றினர். சூரிய மூர்த்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வந்து விசாரித்த போது உயிர்பிழைத்த சூரிய மூர்த்தி, தனது நண்பர் வீரவேலு காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவனை தன்னால் காப்பாற்ற இயலவில்லை என்ற விரக்தியில் விஷம் தின்றதாகவும் கூறியுள்ளார்.

தனது நண்பன் வீரவேலு, உறவுக்கார பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும், ஆனால் அந்த பெண் நன்றாக பழகிவிட்டு, இறுதியில் தான் காதலிக்க வில்லை நட்பாக மட்டுமே பழகினேன் என்று கூறியதோடு பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேறொருவரை திருமணம் செய்து சென்றுவிட்டதால் தனது நண்பன் கடுமையான மன அழுத்தத்திற்குள்ளானதாக தெரிவித்த சூரியமூர்த்தி, அந்த பெண்ணின் நினைவாகவே சுற்றித்திரிந்த தனது நண்பனை நம்பிக்கை சொல்லி தேற்றி வைத்திருந்த நிலையில் தன்னிடம் சொல்லாமல் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

ஆனால் காவல்துறையினரின் பதிவேட்டின் படியோ மருத்துவமனை பதிவேடுகளிலோ வீரவேலு என்ற நபர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக எந்த ஒரு பதிவும் இல்லை, இதையடுத்து சூரிய மூர்த்தி மூலமாக வீரவேலுவின் முகவரியை பெற்று, போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு வீரவேலுவின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு தேவையான இறுதிச் சடங்குகளை உறவினர்கள் செய்து கொண்டிருந்தனர்.

அவர்களிடம், தற்கொலை செய்து கொண்ட சடலத்தை பிணக்கூறாய்வு செய்யாமல் அடக்கம் செய்யக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்த, வீட்டில் தங்கள் மகன் இறந்ததால் சடலத்தை தரமுடியாது என்று வீரவேலுவின் பெற்றோர் மறுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் இப்படி செய்வது சட்டவிரோதம் என்றும், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டியது வரும் என்றும் எச்சரித்ததால் வேறு வழியின்றி வீரவேலுவின் சடலத்தை ஒப்படைத்தனர். காவல்துறையினர் பிணக்கூறாய்வுக்கு பின்னர் வீரவேலுவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சூரியமூர்த்தி தனது நண்பனின் காதல் குறித்து போலீசாரிடம் உருக்கமாக ஒரு கதையை கூறிய நிலையில், போலீசார் உறவினர்களிடம் விசாரித்த போது வேறு மாதிரியான ஒரு கதை தெரியவந்தது. வீரவேலு அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்ததாகவும், காதலை சொல்லாமலே அந்த பெண்ணிடம் பழகி வந்த நிலையில் , ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் காதலை சொல்ல முயற்சிக்கும் போது அந்தப்பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் வீரவேலு உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அந்தப்பெண் தன்னை காதலிப்பதாக நண்பன் வீரவேலு சொன்ன உருக்கமான காதல் கதையை உண்மை என்று நம்பி சூரியமூர்த்தி உயிரை விட முயன்று கடைசி நேரத்தில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தது குறிப்பிடதக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments