சிங்காரமா ஊரு... இது சென்னையின் பேரு... இன்று 382 வது சென்னை தினம்..!

0 4888
சிங்காரமா ஊரு இது சென்னையின் பேரு... இன்று 382 வது சென்னை தினம்

382-ஆவது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையின் சிறப்பு இயல்புகளைக் காணலாம் இந்த செய்தித் தொகுப்பில்!

தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து கிழக்கு இந்தியக் கம்பெனி சிறு நிலத்தை வாங்கி நகரை உருவாக்கியதாக வரலாறு. அதனை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது சென்னை தினம்.

சென்னையின் மிக முக்கியமான பெருமை, விரிந்து பரந்த வங்காள விரிகுடாக் கடல். ஆசியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையாக கருதப்படும் மெரீனாவின் மணற்பரப்பு காண்போரை பிரமிக்க வைக்கிறது.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, நேப்பியர் பாலம், மெட்ராஸ் போர் கல்லறை, அரசு அருங்காட்சியகம், சாந்தோம் தேவாலயம் போன்றவை சென்னையின் பழமையை நம் கண்முன்னே நிறுத்துகின்றன.

கன்னிமாரா நூலகம், கிறித்துவக் கல்லூரியின் நூற்றாண்டு பழைமை வாய்ந்த நூலகம், அண்ணா நூலகம் போன்ற அறிவுச்சுரங்கங்கள் இந்நகருக்கு பெருமை அளிப்பவை.

பட்டணம்தான் போகலாமடி பணம் காசு சேர்க்கலாமடி என்ற வரிகளுக்கு ஏற்ப, சென்னைப் பட்டினம் பலருக்கும் தொழில், வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகனங்களும் கார்களும் வலம் வந்து 24 மணி நேரமும் சென்னை நகரை சுறுசுறுப்பாக்குகின்றன. பேருந்து- ரயில் போக்குவரத்து இருப்பதால் நகரின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதில் சென்றடைய முடியும்.

கையேந்தி பவன் முதல் ஐந்து நட்சத்திர விடுதிகள் வரை இருப்பதால், உணவுக்கு பிரச்சனையில்லை. ஓட்டலுக்கு செல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது உணவு டெலிவரி நிறுவனங்கள்...
வாய்க்கு ருசிதரும் தின்பண்ட விற்பனைக் கடைகள், தேநீர்க் கடைகள், குளிர்பானக் கடைகள், பழக்கடைகள் போன்றவற்றுக்கும் சென்னையில் குறைவில்லை...

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருந்தாலும், சென்னை நகரின் பல இடங்கள் தனது அடையாளங்களோடு அப்படியே இருக்கின்றன.

எல்லாச் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள சென்னை நகரம், இன்று 382 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
நகரில் தூய்மையையும், அழகையும், அமைதியையும் பேணிக்காக்க வேண்டியது சென்னைவாசிகளின் தலையாய கடமையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments