மருமகனை கொல்ல முயற்சி... மகள் வீட்டை தகர்க்க வெடிகுண்டு : தந்தை, மகன்கள் கைது
திருப்பத்தூர் அருகே பாறைக்கு வெடிவைக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை வைத்து, வீட்டையே தகர்த்து சொந்த மருமகனை கொலை செய்ய முயற்சித்ததாக எழுந்த புகாரில் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையின் பேச்சை கேட்டு, அதிகாலையில் தீவிரவாதிகளைப் போல சகோதரி வீட்டில் குண்டு வைத்து, வெடிக்க வைப்பதற்காக மின்கம்பியில் கனெக்சன் கொடுத்த சகோதரர்கள் இருவரும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். அதேபகுதியை சேர்ந்த ராஜா என்பவரது இரண்டாவது மனைவியின் மகளான அணிதாவை, நரசிம்மன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். ராஜாவுக்கு முதல் மனைவி மூலமாக யுவராஜ் மற்றும் கார்த்திக் என இரு மகன்களும் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பூர்விக சொத்தான 3 ஏக்கர் நிலத்தை அடமானத்தில் இருந்து மீட்க முடியாமல் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அந்த சொத்தை மருமகன் நரசிம்மன் 42 லட்ச ரூபாய்க்கு வாங்கிய நிலையில், அதன் விலை தற்போது இரு மடங்குக்கும் அதிகரித்ததாக கூறப்படுகிறது. எனவே, அந்த சொத்தை தன்னிடம் விற்று விடுமாறு மகள் மற்றும் மருமகனிடம் ராஜா தகராறில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
பூர்வீக சொத்து என்பதால், பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள மாமானார் ராஜா முன்வந்ததாகவும், ஆனால் நரசிம்மன் தர மறுத்துவந்ததால் ராஜாவும் அவரது மகன்களும் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் வெளியே படுத்திருந்த நரசிம்மனின் தந்தை ஏதோ சத்தம் கேட்டு எழுந்து பார்த்துள்ளார். அப்போது கார்த்திக் மற்றும் யுவராஜ் இருவரும் சமையலறையில் வெளிப்புறமாக இருந்த ஓட்டை வழியே ஜெலட்டின் குச்சிகளை பொருத்திக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். கூச்சல் போட்டவுடன், இருவரும் கீழே குதித்து தப்பி ஓடியுள்ளனர்.
ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைப்பதற்காக 500 அடி தொலைவில் மின் கம்பத்தில் மாட்டுவதற்காக வயர்களையும் அவர்கள் பொருத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த வயர்களை துண்டித்து விட்டு, போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் ஜெலட்டின் குச்சிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் ராஜா, அவரது மகன்கள் யுவராஜ் மற்றும் கார்த்திக்கை கைது செய்து விசாரித்த போலீசார், கொலை முயற்சி, சட்டவிரோதமாக வெடி பொருளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜெலட்டின் குச்சிகளை சப்ளை செய்த விஜயகுமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து பிரச்சனை காரணமாக தன் சொந்த மருமகனையே வெடிகுண்டு வைத்து கொல்ல நடைபெற்ற முயற்சி, திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments