என்னிடமே காசு கேட்கிறாயா? பேக்கரியில் பஞ்ச் வசனம் பேசி, பஞ்சிங் மெஷினால் மண்டை உடைப்பு.!

0 8194

கூல்டிரிங்ஸ் குடித்ததற்கு பணம் கேட்டதற்காக, பேக்கரிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து சூறையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்னிடமே பணம் கேட்கிறாயா? என பஞ்ச் வசனம் பேசியதோடு, பஞ்சிங் மெஷினை வைத்து கேசியரையும், சப்ளையரையும் மண்டையைப் பிளந்த குடிகார கும்பலின் அட்டகாசங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை அவிநாசி ரோடு, சுகுணா கல்யாண மண்டபம் எதிரே உள்ள கட்டிடத்தில் டாஸ்மாக் மதுபான கடை மற்றும் மகாராஜா பேக்கரி செயல்பட்டு வருகிறது. அங்கு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்தியுள்ளது.

பின்னர் அதில் ஒருவன் அருகேயிருந்த பேக்கரிக்கு சென்று கூல் டிரிங்ஸ் வாங்கி குடித்துள்ளான். பேக்கரி கேசியர் கூல் டிரிங்சுக்கு காசு கேட்டபோது, குடிபோதை ஆசாமி என்னிடமே காசு கேட்கிறாயா என கேட்டுவிட்டு சென்றுள்ளான். வரும்போது 5 பேராக ஆயுதங்களுடன் உக்கிரமாக வந்த கும்பல் பேக்கரியை சூறையாடியுள்ளது.

பேக்கரியில் சப்ளையராக இருந்த மணிகண்டனையும், கேசியர் செல்வின் துரையையும் அந்த கும்பல் நையப்புடைத்துள்ளது. குடித்த கூல்டிரிங்சுக்கு காசு கேட்டது ஒரு தவறா என எண்ணும் அளவுக்கு அந்த கும்பல் மூர்க்கமாக தாக்குதல் நடத்தியுள்ளது.

பேக்கரியில் இருந்த பஞ்சிங் மெஷினை வைத்து கேசியரை தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். அப்போது தடுக்க முயன்ற சப்ளையர் மணிகண்டனையும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இதில் இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பேக்கரியில் இருந்து அனைத்து பொருட்களையும் அந்தக் கும்பல் அடித்து நொறுக்கியதில் சுமார் 30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், வெறிச்செயலில் ஈடுபட்ட, சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து, கௌதம், அருள்நந்தி, தினேஷ், மணி ஆகிய, 23 வயதுக்குட்பட்ட 5 இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சாதிக்க வேண்டிய துடிப்பான வயதில், குடியால் திசைமாறும் இளைஞர்கள் கடைசியில் கம்பி எண்ண வேண்டியதிருக்கும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments