சிசிடிவி, வயர்லெஸ் கருவி ஊழல் புகார்: 14 போலீஸ் அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்

0 3420
சிசிடிவி, வயர்லெஸ் கருவி ஊழல் புகார்: 14 போலீஸ் அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்

காவல்துறைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கியதில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக எஸ்பி அன்புச் செழியன், ஏ.டி.எஸ்.பி.க்கள் ரமேஷ், உதய சங்கர், 7 ஆய்வாளர்கள், 3 உதவி ஆய்வாளர்கள், ஒரு ஓய்வுபெற்ற டிஎஸ்பி என 14 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக காவல் துறைக்கு, சிசிடிவி மற்றும் ரேடியோ, வயர்லஸ் கருவிகள், உள்ளிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில்  முறைகேடு நடந்திருப்பதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் அப்போது சோதனை நடத்தப்பட்டது.

வழக்கமாக, லஞ்ச ஒழிப்பு துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். அதன் இணையதளத்தில் வெளியிடப்படும். ஆனால் தொழில்நுட்ப உபகரணங்கள் ஒப்பந்த  முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். லஞ்ச ஒழிப்புத்துறை இணைய தளத்தில் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது வெளியாகியுள்ள அந்த முதல் தகவல் அறிக்கையின் படி, 14 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 2 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி. அன்புச்செழியன், ஏ.டி.எஸ்.பி.க்கள் ரமேஷ், உதய சங்கர், 7 ஆய்வாளர்கள், 3 உதவி ஆய்வாளர்கள், ஒரு ஓய்வுபெற்ற டிஎஸ்பி என காவல்துறையை சேர்ந்த 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, வி - லிங்க், லுக்மேன் எலக்ட்ரோப்ளாஸ்ட் ஆகிய 2 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணம் பயன்படுத்துதல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட பிரிவுகள் என 8 பிரிவுகளில் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் லுக்மேன் எலக்ட்ரோப்ளாஸ்ட் நிறுவனம், 308 காவல் நிலையங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களுக்கு  செயல்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட விவாகரத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு தொடர்பாக காவல்துறை தொழில்நுட்ப பிரிவு டிஐஜி அளித்த அறிக்கையானது, வழக்கின் முக்கிய ஆதாரமாக இருந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments