தொட்டால் உதிர்ந்தது..! தண்ணீர் பட்டதால் கரைந்ததா கட்டுமானம்..? பி.எஸ்.டி கால்வாய் உடைந்தது

0 13868

சென்னையில் தொட்டால் உதிரும் அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டி சர்ச்சையில் சிக்கி உள்ள பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம், சுமார் 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழ் பவானி வாய்க்காலில் கட்டிய கான்கிரீட் தளம் உடைந்ததால் பல ஆயிரம் கன அடி தண்ணீர் விவசாய நிலங்களுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் புகுந்து வீணானது. தண்ணீர் பட்டதால் பி.எஸ்.டியின் கான்கிரீட் கட்டுமானம் கரைந்ததா? என்று கேள்வி எழுந்ததன் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..!

நாமக்கல்லை சேர்ந்த தென்னரசுவை மேலான் இயக்குனராக கொண்டு செயல்படும் பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏராளமான அரசு திட்ட கட்டிடங்களை ஒப்பந்தம் எடுத்து கட்டிக் கொடுத்து வருகின்றது. இதில் சென்னை புளியந்தோப்பில் இந்த நிறுவனம் கட்டிக்கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் சிமெண்டு சுவர்கள் தொட்டதும் புட்டு போல உதிர்ந்ததால் சர்ச்சையில் சிக்கியது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாயில் 710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளில் பி.எஸ்.டி நிறுவனம் 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நசியனூர் அருகே மலைபாளையத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கசிவு நீருக்காக கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தது.

விவசாயத்துக்காக பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இந்த கால்வாய் வழியாக செல்லும் போது, நசியனூரில் பி.எஸ்.டி நிறுவனம் கசிவுநீர் வெளியேறுவதற்காக கட்டிக் கொடுத்த காங்கிரீட் தளத்தில் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. உடைப்பின் வழியே பெருக்கெடுத்த வெள்ளம், விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மூழ்கடித்தது. தொடர்ந்து மலைபாளையம் பகுதியில் உள்ள கிராமங்களுக்குள்ளும் புகுந்த வெள்ளம் சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

கால்வாய் உடைப்பை ஆய்வு செய்த அதிகாரிகள் உடனடியாக பாசனத்துக்குத் திறந்துவிடப்பட்ட தண்ணீரை நிறுத்தினர். இந்த நிலையில், உடைப்பு ஏற்பட்ட பகுதியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகள் பாதிக்காத வகையில், அடுத்த 10 நாட்களுக்குள் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார். இந்த 10 நாட்களுக்கு விவசாயிகள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், தேவைப்பட்டால், தண்ணீர் திறப்பு கூடுதலாக 10 நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் கூறினார்.

கால்வாய் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் நாமக்கல்லைச் சேர்ந்த பி.எஸ்.டி (PST) நிறுவனம் என தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, கால்வாய் கட்டுமானப் பணியில் தவறுகள் இருப்பது ஆய்வில் தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தொட்டாலே உதிரும் சிமெண்டை கண்டுபிடித்த நிறுவனத்தின் கட்டுமானம் என்பதால் தண்ணீர் பட்டதும் காங்கிரீட் தளம் கரைந்திருக்குமா ? என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த நிறுவனம் கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ள அனைத்து கட்டிடங்கள தடுப்பணைகள் உள்ளிட்டவற்றை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ பரந்தாமன் கோரிக்கைவைத்திருந்தது குறிப்பிடதக்கது.

ரெண்டாக பிளந்த விழுப்புரம் தடுப்பணை, தொட்டதும் உதிர்ந்த சென்னை அடுக்குமாடி குடியிருப்பை தொடர்ந்து, ஈரோட்டில் தண்ணீர் பட்டதும் கரைந்த காங்கிரீட் தளத்தை அமைத்து கால்வாயில் உடைப்பு ஏற்பட காரணமாக இருந்த பி.எஸ்.டி நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தரமற்ற கட்டுமானத்தை கட்டிய வழக்கில் பி.எஸ்.டி நிறுவன மேலாளர் தென்னரசுவை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பி.எஸ்.டி நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து கட்டி முடித்த அனைத்து கட்டடங்கள் குறித்தும் விரைவாக ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments