அரிவாளால் தாக்கி பணம் பறிக்கும் மைனர் கொள்ளை கும்பல்..! சென்னையில் அட்டகாசம்
சென்னையில் புழல் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டகல்லூரி மாணவன் மற்றும் தனியாக நடந்து சென்ற இளைஞர்களை சுற்றிவளைத்து அரிவாளால் தாக்கி பணம் பறித்த சிறுவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அரிவாளுடன் சுற்றும் 5 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.
சென்னை புழல் காந்தி நகர் 3வது தெருவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் குமணன் கடந்த 17ஆம் தேதி இரவு காந்தி பிரதான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை வழிமறித்து, அரிவாளால் வெட்டி பணம் பறித்துச் சென்றனர். பலத்த காயமடைந்த குமணன், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அன்றிரவே செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் தனியார் பெட்ரோல் பங்கில் புகுந்து அங்கிருந்த சுரேஷ்ராஜன், சிரஞ்சீவி ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் பணப்பெட்டியை தூக்கிச்சென்றது
மாதவரம் ரவுண்டனா அருகில் நடந்து சென்ற இளைஞரை விரட்டிச்சென்று மடக்கிய இந்த குமபல் அவரை அரிவாளால் வெட்டி மணிபர்சை பறித்தனர். அதில் ஒன்றுமில்லாததால், அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றனர். இந்த மூன்று சம்பவங்களில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறிவந்த காவல்துறையினருக்கு, சிசிடிவி காட்சி ஒன்று துருப்புச்சீட்டாக கிடைத்தது.
அந்த சிசிடிவி காட்சியில் கையில் அரிவாளுடன் இளைஞரை விரட்டும் கும்பலில் உள்ள சிறுவன் உள்ளிட்ட இருவர் அரிவாளால் தாக்கி மிரட்டும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் கையில் அரிவாளுடன் இருக்கும் இருவரின் முகமும் தெளிவாக பதிவாகி இருந்ததால் அதனை வைத்து அவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.
இந்த வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு அட்டகாசம் செய்த பம்மதுகுலம் கோணி மேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற யூடியூப் கார்த்திக் என்ற ரவுடியை கைது செய்து விசாரித்த போது சிறுவனை முன்னிலைப்படுத்தி இயங்கும் 12 பேர் கொண்ட வழிப்பறிகும்பல் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
சிசிடிவி காட்சியால் சிக்கிய கார்த்திக் கொடுத்த தகவலின் பேரில் சென்னை வியாசர்பாடி பி வி காலனியை சேர்ந்த நாகராஜ் ,புழல் சக்திவேல் நகர் டில்லிபாபு, விக்னேஷ் லட்சுமணன், நேதாஜி ,அபினேஷ் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்
இந்த கொள்ளையர்களிடம் இருந்து பெட்ரோல் பங்க்கில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் பெட்டி மற்றும் 2500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர், ஏழு பேரை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவன் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.
தலைமறைவான அரிவாள் கொள்ளையர்களான மணி, ஆகாஷ், ஜோஸ்வா , வின்சன்ட், உதயா ஆகிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காவல்துறையினர் இரவு ரோந்துபணியை தீவிரப்படுத்துவதோடு, குற்றப்பின்னணி உள்ளவர்களை தொடந்து கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதே நேரத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது போலீசார் இரும்புக்கரம் கொண்டு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
Comments