கொரோனாவால் மூடப்பட்ட பள்ளி..! கட்டணம் வசூலிப்பதில் சிக்கல்..! பள்ளி நிர்வாகி மனைவியுடன் தற்கொலை..!
சுமார் இரண்டு கோடி ரூபாய் கடன் பெற்று தனது பள்ளியை விரிவாக்கம் செய்த நிலையில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல், தனியார் பள்ளி நிர்வாகியும், அவரது மனைவியும் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் - ரோகினி தம்பதியினர் லைஃப் எனர்ஜி என்கிற ஆங்கில வழி தனியார் பள்ளியை நடத்தி வந்தனர். பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க எண்ணிய அந்த தம்பதியினர், வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து 2 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், கொரோனா இவர்கள் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. பெற்றோர்களிடம் இருந்து பள்ளிக் கட்டணம் வசூலிப்பதிலும் சிக்கல் நிலவியதை அடுத்து, வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமலும், கடனுக்கு வட்டி செலுத்தமுடியாமலும் சுப்ரமணியம் - ரோகினி தம்பதி மிகுந்த நிதிச்சுமைக்கு தள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கடன் சுமையை சமாளிக்க வேறு வழியின்றி தவித்த அவர்கள் இரண்டு பிள்ளைகளை தனியாக தவிக்கக் விட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். தற்கொலைக்கு முன் லட்சுமி நரசிம்ம சாமி கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு காரில் வந்த சுப்ரமணியமும், ரோகிணியும் உலகத்தில் இருந்து விடைபெறுவதாக அழுதுகொண்டே வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அத்தோடு, அந்த வீடியோவை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு,தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குடும்பத்தினர் வீடியோவைப் பார்த்து அவர்களைத் தேடிச் சென்று தம்பதியினரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே இருவரும் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Comments