கோயிலுக்குள் செல்ல தடை - வாசலில் நடைபெற்ற திருமணங்கள்

0 3200

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆவணி மாத முதல் முகூர்த்த தினத்தையொட்டி பல்வேறு கோயில்களில் வாசலில் வைத்து திருமணங்கள் நடைபெற்றன.

ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளையொட்டி, சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு திருமணம் செய்துகொள்வதற்காக வந்த புதுமண தம்பதிகள், கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்ததால் தெற்கு மற்றும் வடக்கு கோபுர வாசலில் நின்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்காக வந்திருந்த பலர் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திருமணத்தில் கலந்துகொண்டனர். ஆடி முதல் வெள்ளியையொட்டி காவடி எடுத்தல், மொட்டையடித்து காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் வாசல் முன்பும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் முக கவசம் அணியாமல் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. நான்கு வீதிகளிலும் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட போலீசார், ஒவ்வொரு ஜோடிகளுக்கும் திருமணம் செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கினர்.

கொரோனா பரவல் காரணமாக கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவிலில் திருமணங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆவணி மாத முதல் முகூர்த்த நாளையொட்டி, கோவிலுக்கு வெளியிலேயே திருமணங்கள் நடைபெற்றன. திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments