60 அடி ஆழ பாழுங்கிணற்றில் மோட்டார் பைக்குடன் பாய்ந்த காதல் ஜோடி..! கண்ணை மறைத்த காதல் விபரீதம்
சென்னையில் இருந்து ஊர் திரும்பிய காதலியை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற காதலன், 60 அடி ஆழ கிணற்றில் பைக்குடன் தவறி விழுந்ததில் பரிதாபமாக பலியானார். சுவாரஸ்ய பேச்சால் ஏற்பட்ட கவனக்குறைவால் காதல்ஜோடி பைக்குடன் பாழுங்கிணற்றில் பாய்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சிதம்பரம் ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சாவடி அருகே தைலமரத்தோப்பு ஒன்று உள்ளது. ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள இந்த தோப்பிற்குள் செல்லும் ஒற்றையடி பதையையொட்டி 60 அடி ஆழமுள்ள பாழுங்கிணறு ஒன்றும் உள்ளது. கடந்த செவ்வாய்கிழமை இரவு 9 மணி அளவில் இந்த தோப்பிற்குள் இருந்து காப்பாற்றுங்கள் என்று வந்த பெண்ணின் அபயக்குரலை கேட்டு அந்தவழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அந்த பெண்ணின் சத்தம் அங்குள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து வருவது தெரியவந்தது. டார்ச்லைட் வெளிச்சத்தில் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த போது ஒரு இளைஞரும் , பெண்ணும் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து அந்த கிணற்றுக்குள் தண்ணீரில் தத்தளித்த இருவரையும் உடலில் கயிறு கட்டி மீட்டனர்.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அந்த இளைஞரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதபமாக பலியானார். அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது. அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.
போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளி கிராமத்தை சேர்ந்த பிபிஏ பட்டதாரியான மோகன்ராஜ் என்பதும் அந்தப்பெண் உடையார் பாளையத்தை சேர்ந்தவர் என்பதும் இருவரும் காதலித்து வரும் நிலையில் சென்னை அருகே தனியார் தொழிற் சாலையில் பணிபுரிந்துவந்த நிஷாந்தி விடுப்பில் ஊர் திரும்பியதால், காதலியை பேருந்து நிலையம் சென்று தனது இருசக்கரவாகனத்தில் அழைத்து வந்துள்ளார் மோகன்ராஜ்.
நீண்ட நட்களாக நேரில் சந்திக்காமல் பிரிந்திருந்த நிலையில் தனிமையில் அமர்ந்து பேசும் திட்டத்துடன் அந்த இரவு நேரத்தில் ஆளரவமற்ற தைலமரத்தோப்புக்குள் இருசக்கரவாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார் மோகன்ராஜ். காதலியுடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே கவனக்குறைவாக ஒற்றையடி பாதையில் வாகனத்தை இயக்கிய போது, பாதையையொட்டி இருந்த 60 அடி ஆழ பாழுங்கிணற்றை அவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
கிணற்றில் ஒரு பக்க சுவர் உடைந்து தரைமட்டமாக இருந்ததல் காதல் ஜோடி சென்ற பைக் தவறுதலாக கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது ..! என்றும் உள்ளே விழுந்த போதே தலையில் பலமான அடிபட்டதால், காதலன் மோகன்ராஜ் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காதல் கண்ணை மறைத்ததால், கவனக்குறைவு ஏற்பட்டு காதல்ஜோடி கிணற்றுக்குள் விழுந்ததில், இந்த விபரீத உயிர்பலி நிகழ்ந்திருப்பதாக சுட்டிக்காட்டும் காவல்துறையினர் , இரவு நேரத்தில் இது போன்ற பாதுகாப்பில்லா இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என்று எச்சரிக்கின்றனர்.
Comments