திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு - ஆளுநரை சந்தித்து முறையிட்ட பிறகு இபிஎஸ் பேட்டி
கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு மறுவிசாரணை விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அந்த வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தம்முடைய பெயரையும் சேர்க்க சதி நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, கேரளாவைச் சேர்ந்த சயான் என்பவரிடம், நீதிமன்ற அனுமதியின்றி மறுவிசாரணை நடத்தப்படுவதாக அதிமுக சார்பில் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்தனர். சுமார் 45 நிமிட சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.
கொடநாடு வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணை முடியவுள்ள தருணத்தில் மறு விசாரணை ஏன்? என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, கேரளாவை சேர்ந்த குற்றப்பின்னணி கொண்ட சயான் உள்ளிட்டவர்களுக்கு திமுக ஆதரவு அளிப்பதாகவும், திமுக வழக்கறிஞர்கள் ஆஜராவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் தம்முடைய பெயரையும் சேர்க்க சதி நடைபெறுவதாக செய்திகள் வெளியாவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு 90க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி என்பது தவறான அணுகுமுறை என்றும் எடப்பாடி பழனிசாமி புகார் கூறினார்.
Comments