குடிசை மாற்று வாரியத்துறையை கவனித்து வந்த ஓபிஎஸ் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் - திமுக எம்எல்ஏ பரந்தாமன்
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு தரமற்ற வகையில் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரில், கடந்த ஆட்சியில் குடிசை மாற்று வாரியத்தை கவனித்த ஓபிஎஸ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திமுக எம்எல்ஏ சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். ஐஐடி குழு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் தரமற்று இருப்பதால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, சட்டப்பேரவையில் எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ பரந்தாமன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
கட்டிடங்கள் மிகவேகமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தேதி விவரங்களுடன் குறிப்பிட்ட அவர், தொட்டால் சிணுங்கி பார்த்திருப்போம், ஆனால் தொட்டாலே உதிரும் சிமென்ட்டுகளை கடந்த ஆட்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சியில் நாமக்கல்லில் கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரி கட்டிடம், விழுப்புரம் தடுப்பணை உள்ளிட்ட கட்டிடங்களை ஆய்வு செய்வதோடு, கட்டிடங்களுக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மற்றும் தரமற்ற முறையில் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அரசுக் கட்டிடங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், தரமற்ற கட்டிடங்களை கட்டிய விவகாரத்தில் குடிசைமாற்று வாரியத் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் திமுக எம்எல்ஏ கூறினார். இதற்கு பதிலளித்துப் பேசிய குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், புளியந்தோப்பு குடியிருப்புகளை ஐஐடி குழு ஆய்வு செய்து வருகிறது என்றும், ஆய்வு அறிக்கை வந்த பிறகு யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
Comments