குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உடைந்து விழுந்த விவகாரம்: கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்ய குழு
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பின் தரத்தை சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் தரமில்லாமல் இருப்பதாகவும் , சிமெண்ட் பூச்சுகள் தொட்டாலே உதிர்வதாகவும் புகார் எழுந்தது. லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதலமடைந்து காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கட்டுமான பொறியாளர்கள் , கட்டடவியல் நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளதாக குடிசைமாற்று வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள்களின் தரம் குறித்தும் , தேவையான இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட பிறகு பொது மக்கள் வசிப்பதற்கு அடுக்குமாடி குடியிருப்பு தகுதியானதாக இருக்குமா என்பது குறித்தும் ஆய்வு செய்து அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும். அதனடிப்படையில் ஒப்பந்த நிறுவனம் மீது தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments