கொடநாடு கொலை வழக்கில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினர் செயல்படுகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் செயல்பாடுகள் உள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்த பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவினர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக கூறி வரும் நிலையில், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே கொடநாடு கொலை வழக்கை தற்போது மறு விசாரணை செய்து வருவதாக கூறினார்.
கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை அதனை தொடர்ந்து நடைபெற்ற சில மர்ம மரணங்கள் தொடர்பாக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளதை மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். எனவே நீதிமன்ற அனுமதியோடு தான் வழக்கு மறுபடியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று வரும் நிலையில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினர் செயல்படுவதாகவும், மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்றும் ஸ்டாலின் கூறினார். கொடநாடு கொலை வழக்கில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று கூறிய மு.க.ஸ்டாலின், வழக்கு உரிய முறையில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
Comments