பள்ளி மாணவர்களை யூனிபார்ம் போட்ட போலீசார் துப்பாக்கியுடன் விசாரித்த சம்பவம்: மாநில அரசு பதிலளிக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவர்களை காக்கி சீருடையுடன் போலீசார் துப்பாக்கியுடன் விசாரித்த சம்பவம் குறித்து பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிடார் மாவட்டத்தில் உள்ள ஷாஹீன் பள்ளியில், கடந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடகம் நடத்தப்பட்டது. அதில் நடித்த மாணவிகளில் ஒருவர் மோடிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார் என பள்ளி நிர்வாகம் மீது மாவட்ட காவல் துறை தேச துரோக வழக்கு பதிவு செய்தது.
அது தொடர்பான விசாரணையில் 5 போலீசாரில் 4 பேர் யூனிபார்ம் அணிந்தும் 2 பேர் துப்பாக்கியுடனும் 2 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியிடம் விசாரணை நடத்திய புகைப்படங்கள் வெளியாகின. இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், போலீசாரின் செயல் குழந்தைகள் உரிமை மற்றும் சிறார் நீதிச் சட்ட மீறல் என தெரிவித்து அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
மாணவியை விசாரிக்கும் போது பெண் போலீஸ் வரவில்லை என்பதுடன், சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரியை வைத்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சர்ச்சைக்குறிய நாடகத்தில் தேசதுரோகம் இல்லை என கூறி, பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதமே ஜாமின் வழங்கி விட்டது.
Comments