அராஜகம் தலைவிரித்தாடும் காபூல்: இந்திய தூதரகத்தினர் மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்!
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பிடிக்குள் வந்துவிட்ட நிலையில், அங்கு சிக்கியிருந்த இந்திய தூதர், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டிருக்கின்றன.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள தாலிபான்கள், ஒருபுறம் ஆதரவு நாடுகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு, ஆட்சியமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இயல்பில் அடிப்படைவாதிகளான தாலிபான்களின் போக்கில் சற்று மாற்றம் இருந்தாலும், எந்நேரத்தில் அவர்களது முடிவில் மாற்றம் இருக்கலாம் என்பதால், ஆப்கானிஸ்தானியர்கள் மத்தியில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்த வண்ணமே உள்ளது.
தாலிபான்களுக்கு அஞ்சி எப்படியாவது நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என நினைத்த ஆப்கானியர்களால், காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல், பெரும் அமளி ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, காபூலில் இருந்து பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்க படைகள் தடை விதித்ததோடு, ராணுவ விமானங்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காபூலில் அதிகார ஒழுங்கு என ஏதும் இல்லாத நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகமும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இந்தியர்களை மீட்டு வரும் பணியில் இறங்கினர். இந்திய தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து காபூல் விமான நிலையம் வரை 15 இடங்களில் சோதனைச் சாவடிகளில், தாலிபான்கள் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீட்புப் பணி நடைபெற்றுள்ளது.
தூதரகத்தினரை மீட்டு அழைத்து வரும் வழியில் சிலரது உடைமைகளை பறித்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய திக் திக் நிமிடங்களை கடந்து, இரவோடு இரவாக இந்திய தூதரகத்தினர் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். காபூலில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு அமெரிக்கா வசம் இருந்த நிலையில், அவர்கள் பச்சைக் கொடி காட்டியவுடன் புறப்படுவதற்காக, இந்திய விமானப் படைக்கு சொந்தமான, இரண்டு சி-17 விமானங்கள் தயார் நிலையில் இருந்துள்ளன. நேற்று ஒரு சி-17 விமானத்தின் மூலம், 40 தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இன்று காலை, இந்திய தூதரகத்தை சேர்ந்த 120 பேர் மற்றும் ஆப்கானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திரா தாண்டனுடன் (Rudrendra Tandon) மற்றொரு சி-17 விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக புறப்பட்டு, முற்பகலில் குஜராத்தின் ஜாம்நகரை வந்தடைந்தது.
இந்நிலையில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள், காபூலில் சிக்கித்தவித்த இந்தியர்களை அழைத்துக் கொண்டு, உத்திரப்பிரதேசத்தின் காசியாபாத் ஹிண்டான் விமானத்தளத்தில் இன்று மாலையில் வந்தடைந்ததாக, ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள், C-130J Super Hercules விமானங்கள் மூலம், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானுக்கான அனைத்துவித உதவிகளையும் ஜெர்மனி நாடு நிறுத்திக் கொண்டுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு வழங்கியதோடு, அமெரிக்காவின் வசம் இருந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள், கிடங்குகளை, தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படவில்லை என்று வெளியுறவுத்துறை கூறியிருப்பதாகவும், எஞ்சியுள்ள உள்ளூர் பணியாளர்களை வைத்து தூதரகத்தை செயல்பாட்டில் வைத்திருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள், தாயகம் திரும்ப, காபூல் இந்திய தூதரகத்தில் விண்ணப்பத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments