பெண் பயணியை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்.. தென்காசி அருகே பரபரப்பு..!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசுப் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரை ஆபாசமாகப் பேசி, தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடையம் - ஆலங்குளம் இடையே செல்லும் அரசுப் பேருந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓட்டுநர் முப்புடாதி முத்து என்பவர் இயக்கிச் சென்றுள்ளார்.
குத்தப்பஞ்சான் விலக்கு கிராமத்தில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர், தனது மகள் வந்து கொண்டிருக்கிறார் எனவும் சில வினாடிகள் பேருந்தை நிறுத்துமாறும் ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஓட்டுநர் முப்புடாதி முத்து, அவரை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு அந்தப் பெண்ணும் ஒருமையில் பேசவே, வாக்குவாதம் முற்றி இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த ஓட்டுநர் முப்புடாதி முத்து, அப்பெண்ணை ஆபாசமாகப் பேசியவாறே தாக்கியுள்ளார்.
விவகாரம் காவல் நிலையம் சென்ற நிலையில், இருவரையும் சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் முப்புடாதி முத்துவை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments