ஆப்கானில் போர் முடிந்தது... எவ்வகை ஆட்சியென விரைவில் தெளிவாகும்

0 4816

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தவுடன், உள்நாட்டுப் போர் முடிந்து விட்டதாகவும், எந்த வகை ஆட்சி அமைக்கப்படும் என்பது விரைவில் தெளிவாகும் என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது நயீம் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் ஊரகப் பகுதிகளை முதலில் கைப்பற்றிய தாலிபான்கள் படிப்படியாக ஒவ்வொரு நகராக வென்று இறுதியில் நேற்றுத் தலைநகர் காபூலுக்குள் சென்றனர்.

அதிபர் மாளிகைக்குச் சென்ற தாலிபான்களின் பிரதிநிதிகள், போரின்றி அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கூறினர். இதையடுத்து, அதிபர் பதவியில் இருந்து விலகிய அஷ்ரப் கனி, அண்டை நாடான தஜிக்கிஸ்தானுக்குச் சென்றுவிட்டார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி நாடுகளின் தூதரக அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் விமானங்களில் தங்கள் நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகக் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இதனிடையே தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது நயீம் அல்ஜசீரா தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், இருபது ஆண்டுகளாக நடத்திய போராட்டங்களுக்கும், செய்த தியாகங்களுக்கும் பயன் கிடைத்துள்ளதாகவும், போர் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி எந்த வகையான ஆட்சியாக இருக்கும் என்பது விரைவில் தெளிவாகும் என்றும் குறிப்பிட்டார். தாலிபான்கள் தனித்திருக்க விரும்பவில்லை என்றும், உலக நாடுகளுடன் நல்லுறவை விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இது நாட்டுக்கும் மக்களுக்கும் விடுதலை கிடைத்து விட்டதாகவும், தாங்கள் விரும்பியதை அடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். பிறருக்குத் தீங்கிழைக்கத் தாங்கள் விரும்பவில்லை என்றும், பிற நாடுகளுக்கு எதிராகத் தங்கள் மண்ணில் இருந்து செயல்பட எவரையும் அனுமதிக்க முடியாது என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது நயீம் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் புதிய தலைவராகத் தாலிபான் இயக்கத் தளபதிகளில் ஒருவரான அப்துல் கனி பராதர் பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments