ஆப்கானிஸ்தானில் ஆட்சியை முழுமையாக கைப்பற்றிய தாலிபான்கள் ; அதிபர் அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் தஞ்சம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையும், தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி அங்கிருந்து தப்பி தஜகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டதும், அரசுப் படைகள் மீதான தாக்குதலை தாலிபான்கள் தீவிரப்படுத்தினர். ஒரே வாரத்தில் நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றியிருந்த நிலையில், நேற்று தலைநகர் காபூலைச் சுற்றி வளைத்தனர். ஆனால், அரசுப் படையினர் எந்த எதிர்ப்பும் இன்றி சரணடைந்தனர். பின்னர் தாலிபான்கள் புல் இ சர்கி என்ற இடத்தில் இருந்த சிறைச்சாலையைக் கைப்பற்றி அதிலிருந்த ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவித்தனர்.
அதிபர் மாளிகைக்குச் சென்ற தாலிபான்களின் பிரதிநிதிகள், சண்டையின்றி ஆட்சி மாற்றம் என்று அதிபர் அஷ்ரப் கனியிடம் முன்வைத்தனர். இதற்காக முன்னாள் அதிபர் ஹமீத் கர்ஸாய் மற்றும் தேசிய நல்லிணக்க கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா தலைமையிலான தலிபான்களுக்கும் அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே அதிபர் மாளிகையில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பதவி விலகிய அஷ்ரப் கனி தஜகிஸ்தானில் உள்ள தாஷ்கண்ட் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அஷ்ரப் கனி ஆட்சியை ஒப்படைத்ததைத் தொடர்ந்து இடைக்கால அரசை நிறுவியுள்ளனர்.
Comments