ஆப்கானில் ஆட்சி மாற்றம்..! தாலிபான்களிடம் காபூல்.. அதிபர் பதவி விலகல்..!

0 4223
ஆப்கானில் ஆட்சி மாற்றம்..! தாலிபான்களிடம் காபூல்.. அதிபர் பதவி விலகல்..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அதிபர் பதவியில் இருந்து அஷ்ரப் கனி விலகினார். தாலிபான்கள் தலைமையிலான இடைக்கால அரசுக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி அகமது ஜலாலி தலைமையேற்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெரும் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த தாலிபான்கள் கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து ஹிராத், காந்தகார், மசார் இ சரீப் ஆகிய நகரங்களைக் கைப்பற்றினர். இன்று காலை ஜலாலாபாத் நகரையும் கைப்பற்றி அங்கு வெள்ளைக் கொடிகளை ஏற்றினர். தாலிபான்கள் நகருக்குள் நுழைந்ததுமே அரசுப் படையினர் சண்டையின்றிச் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.

காபூல் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்துக் காபூலை முற்றுகையிட்டனர். போரின்றி ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், அது குறித்துப் பேச்சு நடத்த விரும்புவதாகவும் கூறி அதிபர் மாளிகைக்குச் சென்ற தாலிபான்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நாற்புறமிருந்தும் தாலிபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்ததும் அரசுப் படையினர் அவர்களிடம் சரணடைந்தனர். ஆட்சி மாற்றம் குறித்து அதிபர் மாளிகையில் தாலிபான் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். இதையடுத்துத் தாலிபான்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகினார். அவர் நாட்டை விட்டுவெளியேற உள்ளதாகவும், தாலிபான்களின் கட்டுப்பாட்டில் புதிதாக அமையும் இடைக்கால அரசுக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி அகமது ஜலாலி தலைமையேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காபூலின் புறநகரில் அமெரிக்காவின் விமானப் படைத்தளமாக இருந்த பாக்ராமுக்குத் தாலிபான் படையினர் சென்றதும், அவர்களிடம் அரசுப் படையினர் சரணடைந்தனர். பாக்ராம் சிறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த தாலிபான்கள், அங்கிருந்த கைதிகள் அனைவரையும் விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காபூலில் உள்ள தூதரக அதிகாரிகளைத் திரும்ப அழைத்துக் கொள்ள அமெரிக்கா, பிரிட்டன் அரசுகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments