கமிஷ்னரை வரச்சொல்லுங்க..! நடிகை மீரா மிதுன் கதறல் ஆண் நண்பரும் கைது ..!
தாழ்த்தப்பட்டோர் குறித்து இழிவாக பேசிய புகாரில் கைதான நடிகை மீரா மிதுனை ஆகஸ்ட் 27-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாழ்த்தப்பட்டோர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருந்த நடிகை மீரா மீதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கேரளாவில் வைத்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில், சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை மீரா மிதுன், காவல் ஆணையர் அலுவலகத்தில் கேமராவை நோக்கி கூச்சல் போட்டவாறே சென்றார்.
போலீசார் தன்னுடைய கையை உடைத்துவிட்டதாகவும் மீரா மிதுன் கூறினார்.மீரா மிதுனின் கதறலை சற்றும் பொருட்படுத்தாத போலீசார் அவரை வேகமாக உள்ளே அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர், நடிகை மீரா மிதுனை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதோடு, சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மீராமிதுனை வருகிற 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனிடையே, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து மீரா மிதுன் பேசியிருந்த வீடியோவில் உடனிருந்த அவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷாம் என்பவரையும் கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோவை வெளியிட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, விசாரணைக்கு ஒத்துழைக்காமலும், வழக்கிற்கு சம்பந்தமில்லாமலும் மீராமிதுன் ஏதேதோ பேசுவதாகவும், கமிஷ்னரை வரச்சொல்லி மீராமிதுன் அடம்பிடிப்பதாகவும் போலீசார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட மீரா மிதுனின் ஆண் நண்பர் சாம் அபிஷேக் மீதும் ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சாதி மத மோதலை உண்டாக்குதல் கலகம் விளைவித்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட சாம் அபிஷேக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Comments