இந்திய சுதந்திர தினத்தின் 75 வது ஆண்டு கொண்டாட்டம்..! கண்ணீரும் ரத்தமும் கலந்த தியாகத்தின் வரலாற்றை நினைவுபடுத்தும் நாள்
பிரிட்டன் ஏகாதிபத்திய அரசிடமிருந்து சுதந்திரம் பெற்ற 75 வது ஆண்டு தினத்தை இந்தியா இன்று உற்சாகமாகக் கொண்டாடுகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த போது இந்தியாவை ஆட்டிப் படைத்த பிரிட்டன் கொடி நள்ளிரவில் கீழே இறக்கப்பட்டு மூவர்ண தேசியக் கொடி பட்டொளி வீசியது....
1857 ஆம் ஆண்டு மீரட் நகரில் சிப்பாய் கலகம் தொடங்கி வைத்த இந்திய சுதந்திரப் போராட்டம், நேதாஜி, பகத்சிங் போன்ற வீரம் மிக்க போராட்ட தியாகிகளால் எழுச்சி பெற்ற போது மகாத்மா காந்தியின் அகிம்சை வழி அறப்போராட்டங்களால் புதிய திசையை கண்டது. ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் பட்டேல், போன்ற தலைவர்கள் அயராது பாடுபட்டு, சுதந்திரம் என்ற ஒரு தேசத்தின் மகா கனவை மக்களின் கைகளில் நிஜமாக்கித் தந்தனர்.
மகாகவி பாரதியார், சி.சு.செல்லப்பா போன்ற தமிழ்ப் படைப்பாளிகளும் மக்களின் மனங்களில் சுதந்திர தாகத்தை மூட்டிக் கொண்டே இருந்தனர்.
புதிய கனவுகள், புதிய இலக்குகள், புதிய லட்சியங்களுடன் இந்தியாவின் சுதந்திரம் இன்று 75 வது ஆண்டை எட்டியுள்ளது. பல்வேறு சோதனைகளைக் கடந்த சாதனை வரலாறு இந்தியாவுக்கு உள்ளது.
பன்முகத்தன்மை, ஜனநாயகம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற பல்வேறு கொள்கைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.
கண்ணீர் விட்டு வளர்த்த பயிர் கருகத் திருவுளமோ என்றான் பாரதி.. சும்மா வரவில்லை சுதந்திரம் என்ற உண்மையை உணர்ந்து, இந்த இனிய நாளை சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகளின் நினைவுகளுடன் கொண்டாடுவோம்.
Comments