திருமணம் செய்து 19 வயது மாணவியை பலி கொடுத்த சந்தேகன்..! கிடா வெட்டு பூஜை திகில்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருமணமான மூன்றே மாதத்தில் புதுப்பெண் உருட்டு கட்டையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கிடாவெட்டு பூஜையில் மனைவியின் தலையை சிதறவைத்த விபரீத சந்தேகன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...........
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்த வாட்டாத்திக்கொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன்- காந்தி தம்பதியரின் இரண்டாவது மகளான 19 வயதன ஜோதிக்கும், பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த கத்தார் மாப்பிள்ளை 35 வயதான மணிகண்ட பிரபுவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கத்தார் நாட்டில் ஒப்பந்தவேலை பார்த்து வந்த மணிகண்ட பிரபு திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் ஊர் திரும்பினார். ஜோதி கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் அவசரமாக திருமணம் செய்து வைத்ததால், மணிகண்ட பிரபுவுக்கு மனைவியின் நடத்தையில் ஆரம்பத்திலேயே சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.
திருமணத்துக்கு பின்னர் மனைவி ஜோதியுடன் மணிகண்ட பிரபு பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஜோதியின் உறவினரான, பேராவூரணி அடுத்த ஊமத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு, கணவன் மனைவி இருவரும் விருந்துக்கு வந்துள்ளனர்.
வீட்டில் அனைவருக்கும் கிடா விருந்து தயாரான நிலையில் புதுமண தம்பதியர் இருவரும் காலை 10 மணி அளவில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளனர்.
ஆனால் மணிகண்டன் சிவன் கோயிலுக்குச் செல்லாமல் ஏரிக்கரை வழியாக பேராவூரணி நோக்கி ஜோதியை அழைத்து சென்றுள்ளான். ஜோதி கோயிலுக்கு செல்லாமல் எங்கு செல்கிறீர்கள் ? எனக் கேட்ட போது அங்கிருந்த கருவேலமரக்கட்டையை எடுத்து ஜோதியின் தலையில் மணிகண்டன் சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் தலை சிதறிய நிலையில் சம்பவ இடத்திலேயே ஜோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜோதியை கொலை செய்துவிட்டு கணவன் மணிகண்ட பிரபு, பல்சர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி போலீசார் சடலத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக் கண்ணன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் வசந்தா ஆகியோர் பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சம்பவ இடத்துக்கு மோப்பநாய் டஃபி வரவழைக்கப்பட்டது. பேராவூரணி சாலையில் ஓடிய மோப்ப நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
போலீஸ் விசாரணையில், "திருமணம் நடந்து மூன்று மாதமான நிலையில் ஜோதியின் கணவர் மணிகண்டன் சைக்கோ போல் நடந்து கொண்டதாகவும், சந்தேகப்பட்டு அடிக்கடி பிரச்சினை செய்ததாகவும், கூடுதல் நகை பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், தங்கள் மகள் மூலம் தெரியவந்ததாக, கொலை செய்யப்பட்ட ஜோதியின் தாயார் காந்தி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை சம்பவத்தால் ஜோதியின் உறவினர்கள் யாரும் சாப்பிடாததால் கிடா விருந்துக்கு சமைத்து வைக்கப்பட்ட அனைத்து உணவு பொருட்களும் வீணானது.
தலைமறைவாக உள்ள கொலையாளி மணிகண்டபிரபு சிக்கினால் தான் கொலைக்காண உண்மையான காரணம் வெளிச்சத்திற்கு வரும் என்றும், கணவன் மனைவிக்கிடையே உள்ள வயது வித்தியாசம் காரணமாக, போதிய புரிதல் இன்றி இளம் மனைவி மீதான விபரீத சந்தேகம் கொலையில் முடிந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
Comments