உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கத்தோடு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட்

0 3449

நபார்டு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் வேளாண் கடனாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும் திட்டம் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலையை உயர்த்தும் வகையில், நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத் தொகைகளும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எலெக்ட்ரானிக் முறையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் சார்பு துறைகளுக்கு 34 ஆயிரத்து 220 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லுக்கான ஊக்கத்தொகை, ஒரு குவிண்டால் சன்ன ரகத்திற்கு 70 ரூபாயில் இருந்து 100 ரூபாய் ஆகவும், சாதாரண ரகத்திற்கு 50 ரூபாயில் இருந்து 75 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல், சன்ன ரகம் 2060 ரூபாய் ஆகவும், சாதாரண ரகம் 2015 ரூபாய் ஆகவும் கொள்முதல் செய்யப்படும். கரும்பு உற்பத்திக்கான ஊக்கத் தொகை டன்னுக்கு 42 ரூபாய் 50 காசுகளும், கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை டன்னுக்கு 150 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கத் தொகையால், விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு 2 ஆயிரத்து 900 ரூபாய் வீதம் பெறுவார்கள்.

பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, காப்பீட்டு கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக 2 ஆயிரத்து 327 கோடி ரூபாய் வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சத்தான காய்கறிகளை தங்கள் வீடுகளிலேயே விளைவிக்க, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம் அறிவிக்கப்பட்டு 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்திற்கு 4 ஆயிரத்து 508 கோடி மின்வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் 10 கோடி ரூபாயில் காய்கறிகள், பழங்களுக்கான குளிர்பதன கிடங்குகள், நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் 50 லட்சம் ரூபாய் செலவில் மிளகிற்கான பதப்படுத்தும் மையம்,  ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக் கலைக்கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக் கலைக் கல்வி தமிழில் அறிமுகம் ஆகிய அறிவிப்புகளும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்பதப்படுத்துதலுக்கு நாகை, தேங்காய்க்கு கோவை, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என 5 தொழிற் கற்கும் மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை விவசாயிகளுக்கு என்று சிறப்பு ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண் கடன், வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயும் வழங்கும் வகையில் விரிவான திட்டம் வகுத்துள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments