ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு சார் பதிவாளர் மீது எப்.ஐ.ஆர்..! 6 பேரை போலீஸ் தேடுகின்றது
சின்னத்திரை தயாரிப்பாளருக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த சம்பவத்தில் பாளையங்கோட்டை சார்பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது நெல்லை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெளியூர்களில் வசிப்போரின் நிலங்களை போலி ஆவணம் தயாரித்து அபகரிக்கும் கட்டபஞ்சாயத்து கும்பல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
சென்னையை சேர்ந்த சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கர், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் இணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சங்கருக்கும், அவரது சகோதரர் பாலசுப்பிரமணியத்தின் மகன் விஸ்வேஸ்வரனுக்கும் சொந்தமாக, நெல்லை கேடிசி நகரை அடுத்த வி.எம்.சத்திரம் பகுதியில் 75 செண்ட் நிலம் உள்ளது. இதை சங்கரது தாய்மாமாவின் மகள் கிருத்திகாவை பள்ளி செல்லும் வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்ட சகாய ஸ்டீபன் தாஸ் என்பவரும் அவரது கூட்டாளியான வினு என்பவனும் சேர்ந்து போலி பத்திரம் தயாரித்ததாக கூறப்படுகின்றது.
இவர்கள் இருவரும் இந்த நிலம் தொடர்பாக சங்கரை சந்தித்து பேசியுள்ளனர், அப்போது தங்கள் நிலத்தில் வில்லங்கம் உள்ளது என்றும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை ஒரு கோடி ரூபாய்க்கு தங்கள் பெயருக்கு மாற்றித் தரும்படி கேட்டு மிரட்டும் தோரணையில் கட்டபஞ்சாயத்து செய்துள்ளனர். அதற்கு சங்கர் மறுத்துள்ளார். இருந்தாலும் சில வாரங்கள் கழித்து இவர்கள் இருவரது நடவடிக்கையிலும் சந்தேகம் அடைந்து, பாளையங்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தபோது, சங்கர் குடும்பத்திற்கு சொந்தமான 75 செண்ட் நிலத்தையும் சகாய ஸ்டீபன் தாஸ் போலி பத்திரம் மூலம் அவரது பெயருக்கு மாற்றி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நெல்லை மாநகர காவல்துறை, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னையில் பத்திரப்பதிவுத் துறை டிஐஜி ஆகியோரிடம் புகார் அளித்த நிலையில், நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் சங்கரின் அத்தை வசந்தா அவரது தம்பி சுப்பிரமணியன், மகள் கிருத்திகா, மருமகன் சகாய ஸ்டீபன் தாஸ் மற்றும் வினு, பத்திரத்தை போலியாக பதிவு செய்த சார்பதிவாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 6 பேர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்த வசந்தா, 1982ஆம் ஆண்டு தங்கள் தாய்மாமா குமாரை திருமணம் செய்து கொண்ட பின்னர் தான், தங்கள் குடும்பத்துக்கே பரிச்சயம் என்றும் இந்த சொத்து பாகப்பிரிவினை செய்ததே 1979ஆம் ஆண்டுதான் என்றும், ஆனால் 1976ஆம் ஆண்டே தங்களுக்கு சொந்த மாநிலத்தை தாய் மாமா குமார் வசந்தாவின் தம்பி சுப்பிரமணியனுக்கு எழுதிக் கொடுத்தது போல அந்த போலி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த கும்பல் வழக்கில் சிக்கியதாக சுட்டிக்காட்டும் சங்கர், அதுவும் பத்திரத்தை கேரள மாநிலம் பாறசாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தது போல காட்டி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த பிப்ரவரி மாதத்தில் சுப்பிரமணியன் பெயரிலும் , சுப்பிரமணியன் அந்த சொத்தை தனது அக்காள் வசந்தாவுக்கும், வசந்தா அந்த சொத்தை தனது மருமகன் ஸ்டீபன் தாசுக்கும் மாற்றி எழுதி கொடுத்தது போன்று ஒரே நாளில் 3 பத்திரங்களை பதிவு செய்து கொடுத்துள்ளார் சார்பதிவாளர் சண்முகசுந்தரம் என்றும் சுட்டிக்காட்டுகிறார் சங்கர்.
உயில், மூலப்பத்திரம் என எதுவும் இல்லாமல் அப்பட்டமான போலி பத்திரம் என்று தெரிந்தே, இந்த நில அபகரிப்புக்கு சார்பதிவாளர் சண்முகசுந்தரம் உடந்தையானது உறுதி செய்யப்பட்டதால் தான் அவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த வழக்கில் தொடர்புடைய சகாய ஸ்டீபன் தாஸ் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருக்கும் நிலையில் தற்போது தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகின்றது. இவர்களை கைது செய்து விசாரித்தால் இந்த மோசடிக்கான முழு பின்னணி வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கு மட்டுமல்ல தமிழகத்தில் பல இடங்களில் சொந்த ஊருக்கு அடிக்கடி வராமல் வெளியூர்களில் தங்கி தொழில் செய்வோரின் நிலங்களை போலி பத்திரம் தயாரித்து வில்லங்கத்தை ஏற்படுத்தி அபகரிக்கும் கும்பலின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
Comments