போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு..! குறைந்த கட்டணத்தில் மல்டி லெவல் பார்க்கிங்
சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தின் கீழ் சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள மல்டி லெவல் பார்க்கிங் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன நிறுத்தும் வசதிகளை மேம்படுத்தவும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தியாகராய நகர் பாண்டிபஜார், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலை, அண்ணாநகர், மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட 30 இடங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் கொரோனா காரணமாக சென்னை முழுவதும் அமல்படுத்த முடியாமல் தடைபட்டு போனது. இந்நிலையில், முதற்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் அடிப்படையில் பாண்டிபஜார் பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி கொண்டு வரப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தில் சாலை ஓரம் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கபட்டு வருகிறது. இதே கட்டணம் தான் மல்டி லெவல் பார்க்கிங்-ற்கும் வசூலிக்கப்படுகிறது. இந்த வாகன நிறுத்த வளாகத்தில் ஒரு தளத்தில் 37 வாகனங்கள் என்ற அளவில் மொத்தம் 6 தளத்தில் 222 கார்கள் நிறுத்தும் வகையில் இடவசதி உள்ளது.
அதே போல 513 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் உள்ளது. முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும் நவீன வாகன நிறுத்தம் குறைவான நேரத்தில் மிகுந்த பாதுகாப்புடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தம் செய்வதற்கு வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து கொள்ளும் வகையிலும், இணையவழியில் கட்டணம் செலுத்தும் வகையிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் அனைத்து பகுதிகளிலும், வாகன நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளிலும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை விரைவில் அமல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், சாலை ஓரங்களில் மட்டுமின்றி அருகில் உள்ள மெட்ரோ உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் புதிதாக வாகன நிறுத்த வளாகங்கள் உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வரும் அனைத்து பகுதிகளிலும் தற்போது வசூலிப்பது போல கட்டணம் வசூலிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
Comments