தூங்காமல் டியூட்டி பார்க்க சொன்னா போராட்டம் பன்ராய்ங்க..! நர்சுகள் இப்படி செய்யலாமா?

0 3839
தூங்காமல் டியூட்டி பார்க்க சொன்னா போராட்டம் பன்ராய்ங்க..! நர்சுகள் இப்படி செய்யலாமா?

திருப்பூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அவதிப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு பரிசோதனை கூட செய்யாமல் இரவு பணியில் படுத்து தூங்கிய செவிலியரை எச்சரித்த டீனுக்கு எதிராக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அப்படி வரும் நோயாளிகளிடம் சில செவிலியர்கள் லஞ்சம் பெறுவதாகவும், அப்படி பணம் கொடுக்க மறுப்பவர்களை மரியாதை குறைவாக பேசுவதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தை ஒன்று காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளது. குழந்தையின் உறவினர் சென்று தூங்கிக் கொண்டிருந்த இரவு பணி செவிலியரை எழுப்பி பரிசோதிக்க கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு கடிந்து கொண்ட அந்த செவிலியர் தாய் பால் கொடுங்க சரியாகிவிடும் என்று அலட்சியமாக பதில் அளித்ததாகவும், பின்னர் தாங்கள் மீண்டும் சொன்ன போதும் அவர்கள் குழந்தையை வந்து பார்க்கவில்லை என்று, குழந்தையின் உறவினரான ராணுவ வீரரின் மனைவி, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் தெரிவித்தார்.

செவிலியர்கள் மீதான இந்த புகார்கள் குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்ட நிலையில் டீன் முருகேசன் மற்றும் துணை உறைவிட மருத்துவர்கள் வினோத் மற்றும் செந்தில் ஆகியோர், புகாரில் சம்பந்தப்பட்ட செவிலியர்களை அழைத்து இரவுப்பணியின் போது தூங்கக்கூடாது, நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் பெறக்கூடாது என்று எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகின்றது. இதை தொடர்ந்து செவிலியர்களிடம் தகாதவார்த்தை பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டதாக குற்றஞ்சாட்டிய செவிலியர் சங்கத்தினர், தலைவி கீதா தலைமையில் மொத்தமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செவிலியர்களின் முன்னறிவிப்பில்லாத இந்த திடீர் போராட்டத்தால் அங்குள்ள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாயினர். செவிலியர்கள் தெரிவித்துள்ள புகாரை மறுத்துள்ள டீன் முருகேசன், செவிலியர்கள் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், பணிக்கு வரும் செவிலியர்கள் வருகைப் பதிவேட்டில் முறையாக கையொப்பமிடுவதில்லை என்றும் இரவு பணியில் தூங்குவது, நோயாளிகளிடம் கெடுபிடி கட்டுவது போன்ற அவர்கள் மீதான புகார் குறித்து விசாரணை நடந்துவருவதாக தெரிவித்தார்.

காலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய செவிலியர்கள் இரவு உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்ததால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளனார்கள்.

இந்த அரசு மருத்துவமனை மட்டுமல்ல தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இரவு பணியில் விழிப்புடன் இருந்து நோயாளிகளை காக்க வேண்டிய உன்னத பணியில் இருக்கின்ற செவிலியர்களில் சிலர் விளக்குகளை அணைத்து விட்டு தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், அவசர உதவி கிடைக்காமல் நோயாளிகள் அவதியுறுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

நள்ளிரவு நேரங்களில் அரசு மருத்துவ மனைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினால் கட்டில் போட்டு தூங்கும் செவிலியர்கள் கையும் களவுமாக பிடிபடுவார்கள் என்று நோயாளிகளின் உறவினர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து நோயாளிகளை கவனித்துக் கொண்ட மகத்தான பணியில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட செவிலியர்களுக்கு மத்தியில் தவறு செய்யும் ஒரு சிலருக்கு ஆதரவாக, அந்த மருத்துவமனையில் பணிபுரிகின்ற ஒட்டு மொத்த செவிலியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்த்து, புகாருக்குள்ளான செவிலியர்களுக்கு தங்கள் தவறை உணரவைப்பது அவசியம். 

அதே நேரத்தில் மனித உயிர்களை காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டிருப்பதால் செவிலியர்கள் தங்கள் போரட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments