தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ.பட்ஜெட் நாளை தாக்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது. சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ.பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக எம்.எல்.ஏ.க்களின் இருக்கை முன்பு கணினி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கையடக்க டேப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தொடர் நடைபெற உள்ள அரங்கத்தை பார்வையிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இதில் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும்? வரிவிதிப்பு இருக்குமா? சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம் அடுத்த மாதம் 21-ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளது. பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, பாதுகாப்புக் காவலர்கள் இன்றே வரவழைக்கப்பட்டு அரங்க வளாகத்தில் காவல் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கினர்.
கலைவாணர் அரங்கம் அமைந்துள்ள வாலாஜா சாலையை அழகூட்டும் விதமாக சென்டர் மீடியனில் புதிய செடிகளை மாநகராட்சி ஊழியர்கள் நட்டுள்ளனர்.
Comments