ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட்டில் தொழில்நுட்பக் கோளாறு -பயணம் தோல்வி

0 4702

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அதிகாலை, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட் , செயற்கைக் கோளை திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் செலுத்த தவறிவிட்டது. ராக்கெட்டின் கிரையோஜெனிக் நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த பின்னடைவுக்கு காரணம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

26 மணி நேர கவுன்ட்டவுனுக்குப் பிறகு, ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட், GISAT-1 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 5.43 மணிக்கு திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சுமார் 52 மீட்டர் உயரம், மூன்று நிலைகளை கொண்ட இந்த ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட பிறகு, முதல் 2 நிலைகளில் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்பட்டது. ஆனால் 7ஆவது நிமிடத்திற்கு சற்று முன்னர், ராக்கெட் செல்லும் பாதையை ஆய்வுக்குட்படுத்திய விஞ்ஞானிகள் அமைதியில் ஆழ்ந்தனர்.

இதைத் தொடர்ந்து சற்று நேரத்தில், திட்டமிட்டபடி இலக்கு எட்டப்படவில்லை என அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு, நிலைகளில் செயல்பாடு இயல்பாக இருந்ததாகவும், ஆனால் மூன்றாவது கிரையோஜெனிக் நிலை செயல்படத் தொடங்குவதற்கு முன்னர், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் இஸ்ரோ ட்விட்டர் பதிவில் தெரிவித்தது. மூன்றாவது கிரையோஜெனிக் நிலை மூலமாகவே, செயற்கைக் கோள் திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்படும். ஆனால் கிரையோஜெனிக் நிலையில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்த தொழில்நுட்ப கோளாறு ஏன் ஏற்பட்டது என்பது குறித்து குழு அமைத்து இஸ்ரோ ஆய்வு மேற்கொள்ளும். இதேபோல, திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்படாத செயற்கைக்கோள் கடலில் விழுந்ததா அல்லது அதற்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், புயல், மேகவெடிப்புகள் போன்ற இயற்கைச் சீற்றங்கள் குறித்து விரைந்து எச்சரிக்க உதவும் GISAT-1 செயற்கைக்கோளை, குறிப்பிட்ட காலம் கழித்து மீண்டும் செலுத்த திட்டமிடப்படும் என விண்வெளித்துறையை கவனித்துக் கொள்ளும் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments