பவுசு சோபிகா காட்டிய ரவுசால் ரோட்டுக்கு வந்த சிங்கிள்..! காரை மடக்கி போலீசில் சிக்க வைத்தார்

0 25942
மேட்ரி மோனியல் இணையதளங்கள் மூலம் ஆண்களுக்கு வலைவிரித்து திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு நகை பணத்துடன் தலைமறைவாகும் மோசடி பெண்ணால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சாமர்த்தியமாக அந்த பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். வரதட்சனை இல்லாமல் திருமணத்துக்கு பெண் தேடிய இளைஞரை சிங்கிளாக சாலையில் படுக்கவைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு....

மேட்ரி மோனியல் இணையதளங்கள் மூலம்  ஆண்களுக்கு வலைவிரித்து திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு நகை பணத்துடன் தலைமறைவாகும் மோசடி பெண்ணால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சாமர்த்தியமாக அந்த பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். வரதட்சனை இல்லாமல் திருமணத்துக்கு பெண் தேடிய இளைஞரை சிங்கிளாக  சாலையில் படுக்கவைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.... 

அடிபட்ட வேங்கை போல சாலையில் காருக்கு முன்னாள் படுத்துக் கொண்டு காரை நகர விடாமல் தடுத்து வைத்திருக்கும் இவர் தான் திருமண மோசடி பெண்ணால் பாதிக்கப்பட்ட முரட்டு சிங்கிள் செல்லப்பாண்டி..!

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இரு சக்கர வாகன மெக்கானிக்கான செல்லப்பாண்டி , திருமணத்திற்காக கௌரி மேட்ரிமோனியல் என்ற திருமண இணையதளம் மூலம் பெண் தேடி உள்ளார். அப்பொழுது புதுச்சேரி நேரு தெருவை சேர்ந்த சோபிகா என்ற பெண்ணை பார்த்துள்ளார். பெண் பிடித்துப்போகவே திருமணம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அப்பொழுது தனக்கு தாய் தந்தை யாரும் இல்லை என்று கதை அளந்த ஷோபிகா, சுனாமியில் அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறி உள்ளார். இதனை நம்பிய செல்லப்பாண்டி கடந்த மார்ச் மாதம் எளிமையான முறையில் புதுச்சேரியில் வைத்து நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளார். வரதட்சனை வாங்கி திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைகளுக்கு மத்தியில் வரதட்சனை எதுவும் கேட்காமல், நிச்சயதார்த்தத்தின் போது ஒன்றரை பவுன் தங்க சங்கிலி, பட்டுப்புடவை, 25000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை சோபிகாவிடம் கொடுத்துள்ளார் செல்லப்பாண்டி.

அதன்பின் சோபிகாவிடமிருந்து கடந்த 5 மாதங்களாக எவ்விதமான தகவலும் இல்லை, செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த செல்லப்பாண்டி தனது உறவினரை அழைத்துக் கொண்டு புதுச்சேரியில் உள்ள சோபிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வீடு வாடகைக்கு விடப்படும் என பலகை இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லப்பாண்டி அருகில் உள்ளவரிடம் விசாரித்தபோது அந்தப் பெண் மோசடிப் பேர்வழி என்றும் இதேபோல் பலரையும் திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பெண்ணை பிடிப்பதற்காக திட்டம் தீட்டிய செல்லபாண்டி சோபிகாவின் உறவினரை தொடர்பு கொண்டு திருமணத்திற்காக புடவை மற்றும் நகை எடுக்க வேண்டும், ஆகையால் திண்டுக்கல்லுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து செவ்வாய்கிழமை இன்னோவா காரில் திண்டுக்கல் வருகை தந்த சோபிகாவை பிடித்து வைத்துக் கொண்டு மோசடி செய்தது தொடர்பாக கேட்டபோது சோபிகா தான் செய்தது தவறு என்றும் செல்லப்பாண்டி இடமிருந்து வாங்கிய நகை பட்டுப்புடவை பணம் ஆகியவற்றை திரும்பத் தருவதாக கூறிவிட்டு காரில் ஏறி தப்பிச்செல்ல முயன்றார். வேங்கையென பாய்ந்து காருக்கு குறுக்கே படுத்துக் கொண்ட செல்லப்பாண்டி காரை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினார்.

செல்லப்பாண்டியின் போராட்டத்தில் உள்ள நேர்மையை புரிந்து கொண்டு உள்ளூர்காரர்களும் உறவினர்களும் ஆதரவாக நின்றதால் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது போலீசாரிடம் பிடி கொடுக்காமல் பேசி தப்பவே முயற்சி செய்தார்.

இதனை ஏற்காத செல்லப்பாண்டி திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த சோபிகா மீது புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் சோபிகாவை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 40 வயதான சோபிகா போட்டோ ஷாப் போட்டோ மூலம் தன்னை இளம் பெண்ணாக காட்டிக் கொண்டு மாப்பிள்ளைகளுக்கு வலை விரித்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த பெண் இது போல மேலும் சிலரிடம் மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருமண இணையதளங்களில் வரன்தேடுவோர், மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் பின்புலத்தை விசாரிக்காமல் திருமண ஏற்பாடுகளை செய்தால் பணம் நகையை பறிகொடுப்பதோடு இப்படி சாலையிலும் படுத்து போராட நேரிடும்..! என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments