போதையில் காரை ஓட்டியதால் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி.. அப்பளம்போல் நொறுக்கப்பட்ட கார்

0 8355
தாறுமாறாக ஓட்டி வந்த கார் மோதியதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பேர் பலி : ஆவேசமாக காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குடிபோதையில் தாறுமாறாக ஓட்டி வந்த கார் மோதி நிறைமாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், ஆத்திரத்தில் விபத்தை ஏற்படுத்திய காரை ஆவேசமாக அடித்து நொறுக்கி கிராம மக்கள் குளத்தில் தள்ளினர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கன்னியாகுடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வாணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கணவர் புருஷோத்தமனுடன் இருசக்கர வாகனத்தில் வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்று திரும்பியுள்ளார்.

கற்கோயில் கிராமத்தைக் கடக்கும்போது, எதிரே தாறுமாறாக வந்த மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் மீது மோதிவிட்டு அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் நடந்து சென்ற தையல்நாயகி, ராணி ஆகியோர் மீது மோதி தூக்கி வீசியது.

கார் தூக்கி வீசியதில் தையல் நாயகியும் உயிரிழந்த நிலையில், ராணி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். காரை நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநர் இறங்கி தப்பியோடிய நிலையில், ஆவேசமடைந்த ஊர்மக்கள், காரை அடித்து நொறுக்கி அருகிலிருந்த குளத்தில் தள்ளினர்.

தகவலறிந்து வந்த போலீசார், ஜேசிபி இயந்திரம் கொண்டு குளத்திலிருந்து காரை மீட்டனர். குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியவன் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் அருண்குமார் என்பது தெரியவந்த நிலையில், அவனை கைது செய்யக்கோரி ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தப்பியோடிய அவனை உடனடியாக போலீசார் கைது செய்தனர். ‘

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments