முறைகேடாக டெண்டர் வழங்கியதாக புகார் ; எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கான காரணம் வெளியீடு

0 2385
எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கான காரணம் வெளியீடு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.  

எஸ்பி வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த 2014 முதல் 2018 காலகட்டத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் நடத்தி வரும் நிறுவனங்களுக்கு, முறைகேடாக டெண்டர் வழங்கியதாக அறப்போர் இயக்கமும், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் லஞ்ச ஒழிப்பு துறையில் 2018ஆம் ஆண்டில் புகார் கொடுத்திருந்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த புகார்களின் அடிப்படையில், பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டதும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, கூட்டுச் சதி, குற்ற உடந்தை மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் எஸ்.பி.வேலுமணி உட்பட 7 நபர்கள் மற்றும் 10 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு ரூ. 464.02 கோடி மதிப்பிலும், கோவை மாநகராட்சிக்கு ரூ.364.81 கோடி மதிப்பிலும் டெண்டர்கள் வழங்கப்பட்டதாகவும், இந்த டெண்டர்களை எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் நிறுவனம் உட்பட வழக்கில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக புகார் எழுந்தது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வழக்கில் சிக்கியுள்ள நிறுவனங்களின் வருவாய் கடந்த 2012-13ல் இருந்ததை விட 2018-19-ல் பல நூறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments