"மிஸ்டுகால் உறவு.." இரவல் அண்ணன்; இம்சை வில்லனானான்..!

0 22588

விளாத்திக்குளம் அருகே திருமணமான பெண்ணை தவறாக சித்தரித்து முகநூலில் தகவல் பரப்பிய கிருஷ்ணகிரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மிஸ்டுகால் மூலம் அறிமுகமான இறவல் அண்ணனை நம்பி பழகியதோடு, பரிசாக ஸ்மார்ட் போனும் பெற்ற ஆன்லைன் தங்கைக்கு  நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டியூரைச் சேர்ந்த 28 வயதான மஞ்சுநாதன் என்பவர் தனது செல்போனிலிருந்து நண்பருக்கு அழைப்பு விடுக்கும்போது தவறுதலாக அது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமணமான இளம்பெண்ணின் செல்போனுக்கு சென்றுள்ளது.

அந்த அழைப்பை எடுத்து பேசியது இளம் பெண் என தெரிந்ததும், தான் தவறுதலாக அழைத்து விட்டதாக கூறியதோடு, தன்னை ஒரு சகோதரனாக கருதி மன்னித்து விடுமாறு கூறியுள்ளார் மஞ்சு நாதன். இந்த காலத்தில் இவ்வளவு மரியாதையான நபரா..?! என்று ஆச்சர்யப்பட்ட அந்த பெண், மஞ்சு நாதனை தனது அண்ணனாக பாவித்து பாராட்டியுள்ளார். இந்த இறவல் அண்ணன் தங்கை பாசம் அடுத்தடுத்த நாட்களில் செல்போன் உரையாடல் மூலம் பாசமலர் அண்ணன் தங்கை ரேஞ்சுக்கு தொடர்ந்துள்ளது.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து பேச வேண்டும் என்ற ஆசை கொண்ட மஞ்சு நாதன் வீடியோகால் வரச்சொல்ல , அப்படி என்றால் என்ன என்பது போல அந்த பெண் கேள்வி எழுப்பியுள்ளார். காரணம் தான் பயன்படுத்துவது பேசிக்மாடல் செல்போன் என்பதால் அதில் அந்தவசதி எல்லாம் கிடையாது என்று கூறியுள்ளார். ஸ்மார்ட் போன் இல்லையா என்று ஆதங்கப்பட்ட மஞ்சு நாதன் அண்ணன் வாங்கித்தருகிறேன் என்று கூறியதோடு, கடந்த மார்ச் மாதம் ஒரு ஆண்ட்ராய்டு செல்போனை வாங்கிக் கொண்டு அந்த பெண்ணை நேரில் சந்தித்து வீட்டிற்கே சென்று கொடுத்துள்ளார்.

இறவல் அண்ணனிடம் ஸ்மார்ட்போனை பெற்றுக்கொண்ட அந்தப் பெண், 4 ஜிக்கு மாறியுள்ளார். அவ்வப்போது அண்ணனுடன் வீடியோ காலில் பேசிவந்த அந்த பெண், அந்த ஸ்மார்ட் போனில் முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சகோதரனாகப் பேசி வந்த மஞ்சுநாதன், திடீரென அந்தப் பெண்ணிடம் காதலிப்பதாக கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் இனிமேல் பேசமாட்டேன் என்று கூறியதாக கூறப்படுகின்றது.

சிறுவர்கள் சண்டையிட்டால் தன் கொடுத்த மிட்டாயை திருப்பி கேட்பது போல ஆத்திரமடைந்த மஞ்சுநாதன் தான் வாங்கிக் கொடுத்த செல்போனை திரும்பத்தருமாறு அந்தப் பெண்ணிடம் கேட்டுள்ளான், உடனடியாக அந்தப் பெண்ணும், தான் பயன்படுத்தி வந்த சிம்கார்டு, அதிலிருந்த பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட தகவல்களை கூட அழிக்காமல் செல்போனை அப்படியே மஞ்சு நாதனிடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இதனை திரும்ப பெற்றுச் சென்ற மஞ்சுநாதன், சில நாட்களில் முக நூலில் இருந்த அந்தப் பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி, அந்தப் பெண்ணே ஆண்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்ற புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளான். இதனை வாட்ஸ் ஆப்பிலும் பரப்பியுள்ளான். இறவல் அண்ணன் , இம்சை வில்லனாக மாறியதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப்பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்தவற்றை விவரித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவனிடம் உரிய விசாரணை மேற்கொண்டு கிருஷ்ணகிரியை சேர்ந்த இம்சை வில்லன் மஞ்சுநாதனை கைது செய்தனர்.

ஊரில் அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கின்ற அண்ணன்களின் இம்சையே பல பெண்களுக்கு தீராத தொல்லையாக மாறும் போது ஆன்லைனில் இறவல் அண்ணனை தேடினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments