என்னடா இது சாமியாடிக்கு வந்த சத்திய சோதனை..! ஆடி அமாவாசை பூஜைக்கு தடையால் ஆவேசம்

0 8142

மீஞ்சூர் அருகே மன்சூரலிகான் ஸ்டைலில் நடனமாடி அருள்வாக்கு சொல்லிவந்த சாமியாடியின் அமாவாசை பூஜைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில் அதிகாரிகளை ஒருமையில் திட்டிய சாமியாடி ஆடைகளை அவிழ்த்து போட்டு சாலை மறியல் போராட்டம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது 

காலில் சலங்கையுடன், கருப்பு டவுசர் அணிந்து சூப்பர் ஸ்டார் வேகத்தில் நடந்து வந்து அதிரடியாக பூஜை செய்து அதனை கேமராவால் படம்பிடித்து யூடியூப்பில் பதிவிட்டதால் பிரபலமானவர் நிலத்தடி கருப்பசாமி அருள்வாக்கு சாமியார் ராஜசேகர்..!

பூஜையை முடித்துவிட்டு வாயில் சுருட்டை புகைத்தபடி, கையில் அரிவாளுடன் மண்டபத்தில் ராஜசேகர் போடும் ஆட்டம் நம்ம நடிகர் மன்சூரலிகானின் சினிமா ஆட்டத்துக்கே டஃப் கொடுக்கும் ரகம்..!

மீஞ்சூரை அடுத்த தேவதானத்தில் 5 வருடமாக அருள்வக்கு சொல்லிவரும் ராஜசேகரின் வித்தை உள்ளூர் வாசிகளிடம் எடுபடாவிட்டாலும் வெளியூர்காரர்களுக்கு பலித்ததாக கூறப்படுகின்றது. யூடியூப் பார்த்து ஓட்டலுக்கு சாப்பிட செல்வது போல கருப்பசாமி பாடலுடன் ராஜசேகர் ஆட்டத்தை யூடியூப்பில் பார்த்து பரவசம் அடைந்தவர்கள் அவரை தேடி வருவதை வாடிக்கையாக்கியதால் அமாவாசை பவுர்ணமி நாட்களில் அவரது கோவில் களைகட்டியதாக கூறப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகள், பவுர்ணமி, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் கார் வைத்திருக்கும் வெளியூர் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் ஆடி அமாவாசையன்று அதிகமான மக்கள் கூடுவார்கள் என்றும் வெளியூர்வாசிகளால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் அந்த அருள்வாக்கு பூஜைக்கு வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களும் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆடி அமாவாசையன்று கோவிலும் இழுத்துப்பூட்டப்பட்டது. பக்தர்கள் திருப்பி அனுப்பபட்டனர்

கோவிலில் ஆடி திருவிழாவுக்கு அடிக்கால் நாட்டிய நிலையில், திருவிழாவோடு சேர்த்து தனது அருள் வாக்கு பூஜையும் பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சாமியாடி ராஜசேகர், அரைபோதையில், தனது கோவிலில் பூஜையை சதி செய்து தடுத்து நிறுத்தி உள்ளதாக கூறி தடை உத்தரவிட்ட அதிகாரிகளையும் , போலீசாரையும் வரைமுறையிலாமல் வசைபாடினார்

ஒரு கட்டத்தில் ஆவேசமான அவர் தன்னை 3 நாட்கள் தூங்கவிடாமல் அதிகாரிகள் டார்ச்சர் செய்ததால் பைத்தியம் பிடித்து விட்டதாக கூறினார்

போலீசார் பக்தர்களை திருப்பி அனுப்புவதை கண்ட அவர் தனது ஆடையை அவிழ்த்துபோட்டு ஓட, அவரை கோவில் ஊழியர்கள் சமாதானப்படுத்தி ஆடையை கட்டிவிட்டனர், ஆனாலும் அடங்காமல் அவர் சாலையை மறியலில் ஈடுபட போவதாக கொந்தளித்தார். ஆனால் வருவாய் துறையினர் அந்த கோவிலில் ஒரு பக்கத்தில் அமர்ந்து இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆவேசமாகி சாமியாடி ராஜசேகர் கொந்தளித்த போதும் அருகில் அமைதியாக நின்ற அந்த பக்தை தான் யார் ? என்பதை தெரிவிக்க கடைசிவரை தயங்கியது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments