மகளின் கனவுக்காக மௌனம் காத்த தாய்.. விஷயம் தெரிந்து கதறிய ஒலிம்பிக் வீராங்கனை..!

0 15179
அக்காவின் மறைவுச் செய்தி கேட்டு கதறி அழுத தடகள வீராங்கனை தனலட்சுமி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, திருச்சி திரும்பிய தடகள வீராங்கனை தனலட்சுமி, அவருடைய அக்காள் இறந்த செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுதார். நாட்டுக்காக விளையாடச் சென்ற மகளின் கவனம் கடுகளவும் சிதறிவிடக் கூடாது என எண்ணிய தனலட்சுமியின் தாயார், மறைவுச் செய்தியைக் கூட மறைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த தமிழக தடகள வீராங்கனையான தனலட்சுமி, பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றிருக்கிறார். ஒலிம்பிக் தகுதி சுற்றில் நிர்ணயிக்கப்பட்ட ஓட்டப் பந்தய தூரத்தை மிக குறைவான நேரத்தில் கடந்த தனலட்சுமிக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

போட்டிக்கும் தயாராகவும், டோக்கியோ புறப்படுவதற்காகவும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலேயே தங்கியிருந்த தனலட்சுமி அங்கிருந்தே டோக்கியோவுக்கும் புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தனலட்சுமியின் சகோதரி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை தனலட்சுமிக்கு சொன்னால், போட்டியிலிருந்து கவனம் சிதறி விடும் என எண்ணிய அவரது தாயார் உஷா, தெரியப்படுத்தாமலேயே இருந்துள்ளார். இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டி முடிந்து தமிழகம் திரும்பிய தனலட்சுமிக்கு திருச்சி விமான நிலையத்தில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, தான் தனலட்சுமிக்கு தனது அக்காள் இறந்துவிட்ட செய்தி தெரியவந்துள்ளது. தன்னுடைய கனவுக்காக கஷ்டப்பட்ட அக்காளை இழந்து விட்டது தெரிந்து, மனமுடைந்த தனலட்சுமி விமானநிலையத்திலேயே கதறி அழுதார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்று வந்ததை கொண்டாடக் கூட முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட தனலட்சுமியை அவரது தாயார் ஆறுதல்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

எக்காரணத்தைக் கொண்டும் மகளின் கனவு சிதைந்துவிடக் கூடாது என எண்ணி, தன் மனதை கல்லாக்கிக் கொண்டு வைராக்கியமாக இருந்த தாயின் செயல் எல்லாவற்றையும் விட உயர்ந்து நிற்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments