ஆடி அமாவாசை - நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க தடை
கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நீர்நிலைகளில் திரள தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையையொட்டி பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தடையை மீறி வருபவர்களை தடுத்து நிறுத்தவும் கண்காணிக்கவும், 13 சோதனை சாவடிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் மட்டும் புரோகிதர்கள் இன்றி கடலில் குளித்து செல்கின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை வெறிச்சோடி காணப்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் அம்மா மண்டபம் பகுதியில் குவிக்கப்பட்டு தர்ப்பணம் கொடுக்க வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பினர். இதேபோல் அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை, ஓடத்துறை படித்துறைகளிலும் போலீசார் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆடி அமாவாசையையொட்டி மதுரை வைகையாற்றில் ஏராளமான பொதுமக்கள் தடையை மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க குவிந்த நிலையில், போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். கல்பாலம், பேச்சியம்மன் படித்துறை ஆகிய வைகையாற்று பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஒரே நேரத்தில் திரளானோர் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். அங்கு சென்ற போலீசார் அனைவரையும் வெளியேற்றியதோடு, வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் வைகை கரையோர பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் பொதுமக்கள் திரள தடை விதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள முக்கிய அம்மன் கோயில்கள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோவில் வாசல் அடைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கடல் சங்கமம் , குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி உள்ளிட்ட நீர் நிலைகளிலும், திக்குறிச்சி மஹாதேவர்கோயில், குழித்துறை மகாதேவர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆடி அமாவாசையையொட்டி திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தடையை மீறி குவிந்த பக்தர்கள், கமலாலய தீர்த்த குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். ஓடம்போக்கி ஆற்றிலும் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பூ பழம்,தேங்காய் ,காய்கறி ஆகியவற்றை வைத்து தர்பணம் கொடுத்தனர்.
திருவாரூரை அடுத்த வேளுக்குடி மகா ருத்ரகோடீஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ருத்ரகோடீஸ்வரருக்கு தங்கத்தால் ஆன முக கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தடையை மீறி, சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். நேற்றிரவு முதலே பக்தர்கள் குவிந்ததால் திருவள்ளூர் தேரடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு, கடந்த 6-ம் தேதி முதல் நாளை வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்களின் வருகையை தடுக்கும் விதமாக 200க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments