”தங்கம் வென்ற சிங்கம்..” தலைவர்கள் வாழ்த்து..! நாடு முழுவதும் கொண்டாட்டம்

0 14471

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தந்துள்ளார். இதையடுத்து அரியானாவில் அவரது சொந்த ஊரிலும் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின. அவருக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியின் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. 12 வீரர்கள் பங்கேற்றதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதன்முறையாக 87 மீட்டர் தொலைவும், இரண்டாவது முறையாக 87 புள்ளி ஐந்து எட்டு மீட்டர் தொலைவும் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் மற்றும் ஒரே தங்கப் பதக்கம் இதுவாகும்.

செக் குடியரசின் வீரர்கள் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

2008ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார். அதன்பின் 13ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தை நீரஜ் சோப்ரா வென்றுள்ளார்.

அரியானாவின் பானிப்பட்டில் 1997ஆம் ஆண்டில் பிறந்த நீரஜ் சோப்ரா, இந்திய ராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கெனவே ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி, ஆசிய சாம்பியன், தெற்காசிய விளையாட்டு உலக இளையோர் சாம்பியன் ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளதும் குறிப்பிடத் தக்கது. 2018ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 88 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்துள்ளது இவரது அதிகப்பட்ச சாதனையாகும்.

ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி, ஆசிய சாம்பியன், தெற்காசிய விளையாட்டு உலக இளையோர் சாம்பியன் ஆகியவற்றில் தங்கம் வென்றுள்ளார்

நீரஜ் சோப்ரா பதக்கம் வென்ற போட்டியை அவரது இல்லத்தின் முன் அகன்ற திரைத் தொலைக்காட்சியில் கண்டுகளித்த குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் ஆடிப் பாடிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

இதேபோல் போட்டியைக் கண்டுகளித்த அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் உள்ளிட்டோரும் நடனமாடி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை ஜம்முவில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பங்கேற்ற முதல் போட்டியிலேயே தங்கம் வென்று இதற்குமுன் இல்லாத வெற்றியை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளதாகவும், தடைகளைத் தகர்த்து வரலாறு படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டுள்ளதாகவும், நீரஜ் சோப்ராவின் சாதனை எக்காலமும் நினைவுகூரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தக்க நாள் என்றும், 120ஆண்டுக்காலமாக ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லாத குறை இன்று நீங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே நீரஜ் சோப்ரா தேசிய நாயகன் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments