இந்தியாவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஜான்சன் அண்டு ஜான்சன் ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிகள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. மாடெர்னா தடுப்பூசி இறக்குமதிக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஒரு டோஸ் மட்டுமே போட்டுக் கொள்ளும் வகையிலான தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி, மத்திய அரசிடம் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் கடந்த 5ஆம் தேதி விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஒரே டோஸ் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 5 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவுக்கு எதிரான ஒருங்கிணைந்த போரை இது வலுப்படுத்தும் எனவும் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட சோதனையில், தீவிர நோய்தாக்கம் மற்றும் உயிரிழப்பில் இருந்து ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசி பாதுகாப்பு வழங்குவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஒரு டோஸ் தடுப்பூசியானது, 91 சதவீதம் முதல் 96.2 சதவீதம் வரை, கொரனாவால் உயிரிழப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, பீட்டா வகை கொரோனா வைரசால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையில் இருந்து 67 சதவீதமும், டெல்டா வகைக்கு எதிராக 71 சதவீதமும் பாதுகாப்பு வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments