எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என பன்முக வித்தகரான கலைஞரின் 3-வது ஆண்டு நினைவுதினம்..
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மறைந்து 3 ஆண்டுகளாகி விட்டன. பல்துறை வித்தகராக விளங்கிய அவரை நினைவுகூரும் ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்..
முதல்படமான பராசக்தியிலேயே சமூக அவலங்களுக்கு எதிராக ஒலித்தது கலைஞரின் எழுத்து. மனோகரா, அரசிளங்குமரி, மறக்கமுடியுமா என அவர் வசனம் எழுதிய திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டன. 1950களில் தொடங்கிய கலைஞரின் கலைப்பயணம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.
இளம் வயதிலேயே பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கலைஞர், அண்ணாவின் வழியைப் பின்பற்றி தமிழ்நாட்டின் பட்டித் தொட்டியெல்லாம் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். தமது கணீர் குரலால் லட்சக்கணக்கான தொண்டர்களை தன்வசப்படுத்தியவர் கலைஞர்.
அண்ணா மறைவுக்குப் பிறகு கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அரை நூற்றாண்டுக் காலமாக திமுக தலைவராக தொண்டர்களை வழிநடத்திய கலைஞர், இந்தி திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி , சமூக நீதி, பகுத்தறிவு போன்ற கொள்கைகளை உயர்த்திப் பிடித்தார்.
பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்றியவர் கலைஞர். அவர்களின் எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து சட்டங்களின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் பயன்பெறச் செய்தார்.
கைரிக்சா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம் மற்றும் குடிநீர் வாரியம் அமைத்தது உள்ளிட்டவையும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், விவசாயிகளுக்குக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கடைக்கோடி கிராமம் வரை மின் இணைப்புகள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு தன்னிறைவுத் திட்டங்களும், ஊராட்சிகள் தோறும் நூலகங்கள் கலைஞர் ஆட்சியின் சாதனைகளில் சில துளிகள்..
எழுத்தாளர், பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முக வித்தகராகத் திகழ்ந்த கலைஞர் முத்தமிழ் அறிஞராகப் போற்றப்பட்டார். சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர், கட்சித் தலைவர் என எத்தனையோ பொறுப்புகளை வகித்தபோதும் அடிப்படையில் தாம் ஒரு எழுத்தாளர் என்று கூறிய கலைஞர் எழுத்துப்பணியை விட்டதே இல்லை. 15 நாவல்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகள், தொண்டர்களுக்கு 7000-த்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதி தமது எழுத்துத் திறமையை எடுத்துக் காட்டியவர் கலைஞர்...
அவரது நீண்ட, நெடிய பயணம் மூன்றாண்டுகளுக்கு முன் இதே நாளில் நிறைவுபெற்றாலும், அவர் கட்டிக்காத்த இயக்கம் இன்று ஆலமரமாக வேரூன்றி உள்ளது. வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் தமிழ் சமுதாயத்திற்கு உழைத்தன் மூலம், தமிழக மக்களால் என்றென்றும் பேசப்படும் தலைவராக விளங்குகிறார் கலைஞர்.
Comments